கில்லர் புயல் உயிரிழப்பு கணக்கைத் தொடங்கியது… ராட்சத அலை இழுத்துச் சென்றதில் ஒருவர் பலி!

இங்கிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட கில்லர் எலன் புயல் தன்னுடைய பலி கணக்கைத் தொடங்கியுள்ளது. கார்னிஷ் கடற்கரையில் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட 50 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி டென்னிஸ் புயலுக்குப் பிறகு தற்போது எலன் புயல் பாதிப்பு இங்கிலாந்தை நெருங்கியுள்ளது. கடற்கரைப் பக்கம் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மக்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போல இல்லை. கடற்கரையில் ஆக்ரோஷமான அலைகளில் ஆட்டம் போடுவது, சர்ஃபிங் செய்வது என்று பொழுதைப் போக்கி வருகின்றனர்.

கார்னிஷ் கடற்கரைக்கு வந்த 50 வயது நபர் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அவருடன் இளைஞர் ஒருவரும் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து 999-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படை ஹெலிகாப்டர் உதவியோடு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இளைஞர் உயிரோடு மீட்கப்பட்டார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டென்னிஸ் புயலுக்குப் பிறகு மிக நீண்ட தேடுதல் வேட்டையை அதிகாரிகள் நடத்தினர். நீண்ட தேடலுக்குப் பிறகு 50 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டார். இவர்கள் இருவரும் லண்டனில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வேல்ஸில் போர்ட்மேரியனில் மிகப்பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் பல கார்கள் சேதம் அடைந்தன. இதில் சுமார் 1.2 லட்சம் பவுண்ட் மதிப்பில் தேசம் ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊலாகோம்பே கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிறு ஹட்கள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

(Image: Apex News)

அடுத்த சில நாட்களுக்கு பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடல் அலை ஆக்ரோஷமாகவும் அதிக காற்றும் வீசும் என்பதால், மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் உத்தரவை மீறி பலரும் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஜாக்கிரதையுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

டோவர் கடற்கரையில் எச்சரிக்கையையும் மீறி கடலுக்குள் சென்ற 20 வயது இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக டோவர் கடற்கரையில் 2014ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டது. அங்கு மிக உயரமாக அலைகள் எழும்புகின்றன. 15 அடி உயரத்துக்கு எழுந்து ஆக்ரோஷமாக அடித்த அலையில் அந்த இளைஞரின் கழுத்தெலும்பு உடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். புயல் அடங்கும் வரை அடங்கி இருக்க முடியாமல் சிலர் உயிரைப் பறிகொடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk