புத்தாண்டின் முதல் நாளில் 53,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வரும் சில வாரங்கள் என்.ஹெச்.எஸ்-க்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும் என்று எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. 2020ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி (வியாழக்கிழமை) இங்கிலாந்து கொரோனா எண்ணிக்கையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
வியாழக்கிழமை 55,892 ஆக பதிவான கொரோனாவால் மக்கள் ஆடிப்போய் உள்ளனர். இன்று இந்த ஆண்டின் முதல் நாள் 53,285 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 613 உயிரிழப்பும் பதிவாகி உள்ளது.
இன்றைய நாள் பதிவில் வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கை இடம் பெறவில்லை.
இதற்கிடையே புதிய மிக வேகமாக பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்னும் அதிக கடுமையான ஊரடங்கு தேவை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல், மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நார்த் மிடில்செக்ஸ், கென்ட், மெட்வே, டார்ட்ஃபோர்ட், கிரேவ்ஷாம் மருத்துவமனைகளில் பாதிக்குப் பாதி பேர் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.
வரைவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இது விரைவில் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று என்.ஹெச்.எஸ் கோர்டெரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தடுப்பூசி திட்டம் முழுமை அடையும் வரையில் நாங்கள் மிகவும் சவாலான இடத்தில் இருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும்” என்றார்.
கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்திலிருந்த போது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றவர்களை விட தற்போது அதிக அளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லண்டன் மருத்துவமனைகள் சந்திக்க ஆரம்பித்த அழுத்தம் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. இதைத் தவிர்க்க மக்கள் சில மாதங்களுக்குக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…