காற்றில் பறந்த சமூக இடைவெளி… பப் திறக்கப்பட்ட முதல் நாள் இரவில் குவிந்த புகார்கள்!

Image: news.sky.com
இங்கிலாந்தில் ஊரடங்குக்குப் பிறகு பப்களில் குவிந்த கூட்டம்!

பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில் இருந்தே பப்களில், சலூன்களில் மக்கள் திரண்டனர். நீண்ட காலத்துக்குப் பிறகு திறக்கப்படுவதால் மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

ஊரடங்குக்குப் பிறகான முதல் இரவு என்பதால் ஏராளமான மக்கள் பப்களில் திரண்டனர். இதனால், புத்தாண்டு பிறப்பை விட அதிக அளவில் கூட்டம் பப்களில் நிரம்பி வழிந்தது. லண்டன் சோஹோ மாவட்டம் மட்டுமே மிக பெரிய அளவில் வாடிக்கையையாளர்களை ஈர்த்துள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. அனைத்தும் மது அருந்தியது தொடர்பான புகாராகவே இருந்தது.

வடக்கு நாட்டிங்ஹாம்ஷையரில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மது அருந்தியதால் ஏற்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பல பப்கள் மூடப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றி கவலையில்லாமல் ஏராளமானவர்கள் பப்களில் திரண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய பிறகு சமூக இடைவெளி என்பது முற்றிலும் இல்லாமல் போனது என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே மிக முக்கிய விளையாட்டுக்கள், தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்புக் குழுவினருக்கு தற்போது சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகள் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஃபுட்பால், ஃபார்முலா ஒன், கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுக் குழுவினர். தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்புக் குழுவினர் இங்கிலாந்துக்கு வரும்போது அவர்களுக்கு அவசரத் தேவை இருப்பின் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.