கொரோனா ஊரடங்கு டிசம்பர் 2க்குப் பிறகு நீட்டிக்கப்படுமா? – மெட் ஹென்காக் அளித்த விளக்கம்

situation, end, lockdown, கொரோனா, ஊரடங்கு, London move tier
(Image: PA Media)

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி இப்போது பதில் அளிக்க முடியாது. மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதால் இப்போது அது பற்றி தெரிவிக்க முடியாது என்று சுகாதாரத்துறை செயலர் மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைச் செயலர் மெட் ஹென்காக் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “இங்கிலாந்தில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 25,329 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இது கடந்த வாரத்தில் 22,443 என்ற அளவிலிருந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 14,915 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் மெகா ஆய்வுக் கூடம் 2021 தொடக்கத்தில் தயாராகிவிடும்.

தற்போது ஐந்து மில்லியன் கொரோனா தடுப்பூசியை வாங்க அரசு ஆர்டர் செய்துள்ளது” என்றார்.

14 நாள் செல்ஃப் குவாரன்டைன் விதியில் தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளதா, குறிப்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் செல்ஃப் ஐசோலேஷனில் இருக்கும் இந்த தருணத்தில் அரசுக்கு அப்படி ஏதும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஹென்காக், “பிரதமர் போரிஸ் ஜான்சன் அனைவருக்கும் தெளிவான முன் மாதிரியாக இருக்கிறார்.

நீங்கள் யாராக இருக்கின்றீர்கள் என்பது பிரச்னை இல்லை, நீங்கள் விதியை பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியம்.

கொரோனா செல்ஃப் குவாரன்டைன் நாட்கள் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது உடனடியாக அப்படி எதையும் அறிவிக்க வாய்ப்பில்லை” என்றார்.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஹென்காக், “ஊரடங்கு முடியும் நேரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு தொற்று ஏற்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.

தற்போது தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதுதான் தொற்று பரவியுள்ளது.

எனவே, ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இப்போதே சொல்வது இயலாதது. நாம் இன்னும் ஆரம்பநிலையில்தான் உள்ளோம்.

இருப்பினும் கொரோனா ஊரடங்குக்கு மாற்றாக ஏற்கனவே நடைமுறையிலிருந்த நடுத்தரம், தீவிரம், அதிதீவிரம் போன்ற நிலை (டயர் சிஸ்டம்) போல வேறு அமலுக்கு வரலாம். ஆனால் இப்போதைக்கு அதுபற்றி எதுவும் கூற இயலாது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter