டிசம்பர் 2க்குப் பிறகு கடுமையான மூன்றடுக்கு உள்ளூர் கட்டுப்பாடு! – டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்

tier system lockdown, ஊரடங்கு, கட்டுப்பாடு, கொரோனா, பாலியல்

டிசம்பர் 2ம் தேதி பொது முடக்கம் முடிவடைந்த பிறகு மூன்றடுக்கு உள்ளூர் கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. டிசம்பர் 2ம் தேதி இந்த ஊரடங்கு முடிவடைகிறது.

அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது பழைய படி மூன்று அடுக்கு கடும் உள்ளூர் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதே பலரின் கவலையாக உள்ளது. குடும்பங்கள் சந்திப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் குடும்ப சந்திப்புகளை அனுமதித்தால் அதன் பிறகு 14 நாள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் நாமே நமக்கான கல்லறையை உருவாக்கிவிடுவது போல் ஆகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த சூழலில் நாளை (திங்கட்கிழமை) டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கிறிஸ்துமஸ் நேரத்தில் குடும்பங்கள் ஒன்று கூடல் தொடர்பான அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா: புற்றுநோய் என நாடகமாடி 45 ஆயிரம் பவுண்ட்டை சுருட்டிய பலே பெண்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதே போல் மிதமான, குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளில் எளிய கட்டுப்பாடுகளும் இருக்கும் வகையில் மூன்றடுக்கு கட்டுப்பாடு மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு அமலில் இருந்த கட்டுப்பாடுகள் ஆற்றல் மிக்கதாக இல்லை என்று அரசின் அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் எந்த எந்த பகுதிக்கு என்ன மாதிரியான அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

முழு ஊரடங்குக்கு முன்பு டயர் 1 (மிதமான நிலை), டயர் 2 (உயர் நிலை), டயர் 3 (மிக மோசமான நிலை) என்று மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter