ஸ்டான்ஸ்டெட்: வெறும் செல்போனுக்கு பயந்து தரையிறக்கப்பட்ட விமானம்!

Ryanair
(Image: Reuters)

லண்டன், 31 ஆகஸ்ட் 2020: வியன்னாவில் இருந்து லண்டன் நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்ததால் அவசர அவசரமாக ஸ்டான்ஸ்டெட்டில் தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு போரையும் போலீசார் விடுவித்துள்ளனர்.

வியன்னாவில் இருந்து லண்டனுக்கு நேற்று மாலை ரயான்ஏர் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் இருந்தன.

இதனைக் கண்ட விமான பணியாளர்கள் இது குறித்து விமானிக்கு தெரிவித்தனர். அவர் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அந்த பயணிகள் விமானத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இரண்டு போர் விமானங்கள் துணைக்கு வந்தன.

விமானம் அவசர அவசரமாக லண்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள ஸ்டான்ஸ்டெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராணுவ விமானங்கள் விமான நிலையத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டன.

அதற்குள்ளாக விமானத்துக்குள் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் நுழைந்து சந்தேகத்துக்குரிய இரண்டு பேரை அழைத்துச் சென்றனர். மக்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குவைத் நாட்டைச் சேர்ந்த 34 வயது நபர் என்பதும், மற்றொருவர் இத்தாலியைச் சேர்ந்த 48 வயது நபரும் ஆவர்.

அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

விமானத்தில் கிடந்த சந்தேகத்துக்கிடமான பொருளை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். அது மொபைல் போன் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் அது ஆபத்தான பொருள் இல்லை என்பதையும் கிழக்கு பிராந்திய சிறப்பு செயல்பாட்டு பிரிவின் (ERSOU) அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதற்கிடையே பயங்கரவாத தடுப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் இருவரும் அப்பாவிகள் என்பது தெரியவந்தது. இதற்குள்ளாக சந்தேகத்துக்குரிய பொருள் வெறும் மொபைல் போன்தான் என்று தெரிய வரவே, அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ERSOU பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவரும் துப்பறியும் கண்காணிப்பாளருமான ஆன்டி வால்டி இது குறித்து கூறுகையில், “விமானத்தில் சந்தேகத்துக்குரிய பொருள் இருந்தது என்று வரும் எந்த ஒரு தகவலையும் அலட்சியம் காட்டாமல் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் கவலைப்படும் விஷயம் எதுவும் இல்லை. கைது செய்யப்பட்ட இருவரும் அப்பாவிகள். அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த பயணிகளுக்கு நன்றி” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter