லண்டன் இந்தியர் கடையில் பயங்கர கேஸ் சிலிண்டர் வெடி விபத்து… இருவர் பலி!

blast, London
விபத்துக்குள்ளான கடையின் தோற்றம் (Image: BBC / PA Media)

லண்டன், அக்டோபர் 21, 2020: லண்டன் சவுத் ஹாலில் இன்று காலை ஏற்பட்ட இயற்கை எரிவாயு கசிவு வெடி விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டன் சவுத்ஹால் கிங் சாலைல் உள்ள சலூன் மற்றும் மொபைல் ஷோரூம் அமைந்துள்ள இடத்தில் இன்று காலை 6.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த லண்டன் ஃபயர் பிரிகேட் (எல்.எஃப்.பி) வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த நான்கு பெரியவர்கள் மற்றும் குழந்தையைப் பத்திரமாக மீட்டு, தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இயற்கை எரிவாயு கசிவால் இந்த சம்பவம் நடந்தது என்றும் இது தொடர்பாக யாரையும் தேடவில்லை என்றும் அறிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டேஷன் கமாண்டர் பால் மோர்கன் கூறுகையில், “சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி எங்கள் மீட்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களுடன் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது.

இதில் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

விபத்து நடந்த கட்டிடத்தின் உறுதித் தன்மை பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை வரை மீட்புப் பணிகள் நடந்தன. நாளை காலையும் தொடரும்” என்றார்.

இன்று காலை 6.30 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்களுக்கு 6.40 மணி அளவில் அழைப்பு வந்ததாகவும் உடனடியாக ஆறு தீயணைப்பு வண்டிகளில் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் போன் என்ற மொபைல், கம்ப்யூட்டர் கடையை நடத்தி வந்த ஜத்திந்தர் சிங் கூறுகையில், “மொத்த அதிர்ச்சியில் உள்ளேன். அனைத்தும் பறிபோய்விட்டது.

இது காஸ் வெடி விபத்து போல உள்ளது. கேஸ் சிலிண்டர் விபத்து மாடியில் நடந்துள்ளது.

என்னுடைய கடை கீழ்த் தளத்திலிருந்தது. என்னுடைய கடையும் என்னுடன் இணைந்து கடை வைத்திருந்த சலூன் கடையும் முற்றிலும் சிதைந்துவிட்டது.

கொரோனா வைரஸ் காலத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். விற்பனை தடைப்பட்டதால் கடையில் அதிக ஸ்டாக்குகள் இருந்தன. எப்படி வாழ்வேன் என்றே தெரியவில்லை” என்றார்.

இந்த விபத்து காரணமாக மேலும் பல கடைகள், மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.

தற்போது அங்கு மின்சார இணைப்பு, எரிவாயு இணைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மேலும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter