சாக்வெல்: அத்துமீறி கூடிய இளைஞர்களுக்குள் மோதல்! – 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து

Chalkwell

சாக்வெல் ரயில் நிலையம் அருகே பூங்காவில் அத்துமீறி ஒன்று கூடிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் உதவியுடன் இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வெஸ்ட் கிளிஃப் சாக்வெல் எஸ்பிளனேட் அருகே பூங்காவில் இளைஞர்கள் கும்பலாக ஆயுதங்களுடன் தாக்கிக்கொள்வதாக நேற்று இரவு ஏழு மணி அளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு எசெக்ஸ் போலீசார் விரைந்து சென்றனர். போலீஸ் ஹெலிகாப்டரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு பேருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு காயங்கள் இல்லை. 15 வயது மாணவன் ஒருவனுக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு மாணவனுக்கு கை புஜம் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

பசில்டனை சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவன் ஆபத்தான ஆயுதங்களை வைத்து மாணவர்கள் மீது காயம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும் ஒகேண்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரையும் போதைப் பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் வைத்துள்ளனர்.

சாக்வெல் எஸ்பிளனேட் அருகே ஏராளமான இளைஞர்கள் இளம் பெண்கள் திரண்டிருந்ததாகவும், போதைப் பொருள் பயன்படுத்துவதில் சண்டை ஏற்பட்டதாகவும், இதில் இந்த தாக்குதல் நடந்தது என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், லிவர்பூல் சென்டரில் குழுவாக சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சாலையில் விழுந்த கிடந்த அவர்களை யாரும் தொட வேண்டாம் என்று ஒரு பெண் சத்தமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் பல பகுதிகளில் இது போன்று அனுமதியின்றி, திடீரென்று இசை கேளிக்கை நிகழ்ச்சி நடத்துகிறோம் என்று இளைஞர்கள் கூடுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் போதைப் பொருள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத காரியங்கள் நடைபெறுவதை போலீசார் முன்கூட்டியே அறிந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk