தென் ஆப்ரிக்காவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ்… பயண தடை விதித்த பிரிட்டன்!

கொரோனா
(Image: Reuters)

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு பயணத் தடையை பிரிட்டன் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பயணத் தொடர்பையும் தற்காலிகமாக துண்டித்துள்ளன.

இதே போல் தென் ஆப்ரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு சமீபத்தில் பயணம் செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பியவர்களில் இருவருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் தென் ஆப்ரிக்காவில் இருந்து வருபவர்கள், தென் ஆப்ரிக்கா வழியாக வருபவர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா: 2022க்கு முன்பு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவோம்! – ஹென்காக் நம்பிக்கை

ஆனால் இந்த விதி இங்கிலாந்து மற்றும் ஐரிஷ் நாட்டவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல் தென் ஆப்ரிக்காவுக்கு சென்றுவிட்டு கடந்த 10 நாட்களில் இங்கிலாந்துக்கு திரும்பியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு இன்று கிறிஸ்மஸ் ஈவ் (டிசம்பர் 24) 9 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்துக்குள் பரவுவது தடுக்கப்படும் என்று இங்கிலாந்து போக்குவரத்துத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமசுக்கு அடுத்த நாளிலிருந்து சசெக்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு ஷையர், சஃபோல்க், நோர்ஃபோக், கேம்பிரிட்ஷையர், ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மேலும் 60 லட்சம் மக்கள் நான்காம் நிலை ஊரடங்குக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter