இங்கிலாந்தில் ஒரே நாளில் 17,540 ஆகப் பதிவான கொரோனா!

ஊரடங்கு காலத்தில் லண்டன் வீதி (Image: Tolga Akmen)

லண்டன், அக்டோபர் 8, 2020: இங்கிலாந்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 17,540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 8ம் தேதி வியாழக்கிழமை இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று 17,540 ஆகப் பதிவாகி உள்ளது. புதன் கிழமை இது 14,162 ஆக இருந்தது.

இரண்டு வாரமாக வேகமாக அதிகரித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை காரணமாக மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42,592 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முந்தைய வாரங்களில் விடுபட்ட நோயாளிகள் எண்ணிக்கையுடன் சேர்த்து 22,961 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

அது பல நாட்களின் விடுபட்ட எண்ணிக்கை என்பதால் புதிய உச்சமாக கருத முடியாது. இன்று 17,540 ஆக பதிவாகி இருப்பதே இங்கிலாந்தின் புதிய உச்சமாக கருதப்படுகிறது.

இதற்கிடையே வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சர்கள் நாதின் டோரிஸ் மற்றும் எட்வர்ட் ஆர்கர், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிரிஸ் வொய்ட்டி ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினர்.

அப்போது அவர்கள், “மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பப், ரெஸ்டாரண்ட்களை மூடுவதில் சாதகமான திட்டம் பற்றி விரிவான தகவல் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

நாட்டின் தலையில் துப்பாக்கியை வைத்தது போன்ற நிலை வந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி இங்கிலாந்தை அழைத்துச் செல்கிறது.

அதை தடுக்க மக்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே நல்லது… இல்லை என்றால் முழு ஊரடங்கு என்ற சுமையை அனைவரும் சுமக்க வேண்டியிருக்கும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கவனத்துடன் இருப்போம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம்… முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றில் கவனத்துடன் இருப்போம். கொரோனா பரவலைத் தடுப்போம்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter