மீண்டும் உயர்ந்த கொரோனா தொற்று… ஒரே நாளில் 20,964 ஆகப் பதிவு!

UK, Covid, cases, கொரோனா
(Image: London News Pictures)

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 20,964 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு இருந்த காலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்த வேண்டும், நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஊரடங்கை விலக்கி, மூன்று நிலை கட்டுப்பாடு வந்த போது கூட நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் நடந்தன.

தற்போது மூன்று நிலை கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமா கொரோனாத் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக லண்டனில் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக லண்டனில் மூன்றாம் நிலை கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

லண்டனில் மூன்றாம் நிலைக் கட்டுப்பாடு கொண்டுவராவிட்டால் அது இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரவ காரணமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வரையிலான கணக்குப் படி இங்கிலாந்தில் புதிதாக 20,964 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் இதுவே புதிய உச்சம். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,787,783 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 516 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63,082 ஆக உயர்ந்துள்ளது.

லண்டனில் ஒரு லட்சம் பேருக்கு 191.8 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகின்றன. இது கடந்த வாரத்தைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிகமாகும்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் லண்டன் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் தொற்று அதிகரித்து வந்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளில் தாக்கம் குறைந்து வருவதைக் காண முடிகிறது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி வந்துவிட்டதால் அது நோய்ப் பரவல் தடுப்பில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter