அக்டோபரில் ஒரு நாளைக்கு 50,000 நோயாளிகள்! – அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

Sir Patrick Vallance, பேட்ரிக் வேலன்ஸ்
சர் பேட்ரிக் வேலன்ஸ் கோப்புப் படம். (Image: Reuters)

லண்டன், 21 செப்டம்பர் 2020: இங்கிலாந்தில் தற்போது கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் அடுத்த மாதம் மத்தியில் இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கொரோனாத் தொற்று நோயாளிகள் கண்டறியப்படும் நிலை வந்துவிடும் என்று தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வேலன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை செவ்வாய்கிழமை கோப்ரா அவசர நிலை ஆலோசனைக் குழு கூட்டம் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வேலன்ஸ் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விட்டியுடன் இணைந்து டவுனிங் ஸ்ட்ரீடில் பேட்டி அளித்தார்.

அப்போது, “அரசு தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கொண்டுவராவிட்டால் அடுத்த மாதம் மத்தியில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் நோயாளிகள் கண்டறிப்படும் நிலை உருவாகும்.

ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பார்கள். இந்த தொற்றுநோய் ஏழு நாளைக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது.

இது தடையின்றி தொடர்ந்தால், அக்டோபர் மத்தியில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் என்ற நிலையை அடையலாம். அதற்கு அடுத்த மாதங்களில் தாக்கம் எப்படி இருக்கும் என்பது கற்பனை செய்ய முடியவில்லை. நவம்பரில் ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க விரைவான நடவடிக்கை அவசியமாகிறது. தொற்று பரவும் வேகத்தைக் குறைக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் 70 ஆயிரம் பேருக்கு தொற்று இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தினமும் 6000ம் பேர் புதிதாக இதில் இணைந்து வருகின்றனர்.

நாட்டின் மக்கள் தொகையில் எட்டு சதவிகிதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இருந்தது போன்று மைல்டாக வைரஸ் கிருமித் தொற்று தற்போது இல்லை” என்றார்.

இங்கிலாந்தில் இன்று திங்கட்கிழமை 4368 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 11 பேர் உயிரிந்துள்ளனர் என்ற நிலையில் இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter