இங்கிலாந்துக்கு வரத் தொடங்கிய கொரோனா தடுப்பூசி!

corona vaccine doses, கொரோனா, தடுப்பூசி
(Image: Dado Ruvic / Reuters)

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்துக்கு வரத் தொடங்கிவிட்டது. அடுத்த வாரத்துக்குள் எட்டு லட்சம் யூனிட் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் காரணமாக ஒவ்வொரு நாடுகளும் அனுமதி கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முதல் நாடாக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது பிரிட்டன்.

தற்போது வேறு எந்த நாடும் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நிலையில், பெல்ஜியம் நாட்டில் உள்ள ஃபைசர் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி அனைத்தும் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியை சுமந்துகொண்டு வந்த முதல் சரக்கு பெட்டகம் நேற்று வந்தது. மிட்லாண்ட்ஸ் பகுதியில் அந்த தடுப்பூசி ரகசியமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இங்கிலாந்துக்கு எவ்வளவு தடுப்பூசி அனுப்பப்பட்டது என்ற தகவலை அரசு வெளியிடவில்லை.

தொடர்ந்து இங்கிலாந்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்திடம் எட்டு லட்சம் யூனிட் தடுப்பூசி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்துறை செயலாளர் அலோக் ஷர்மாவிடம் பிபிசி கேட்டுள்ளது. அதற்கு அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகபட்சமாக கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து வரும். எவ்வளவு என்பதை தற்போது கூற முடியாது.

அதே நேரத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கும் போது, அதாவது அடுத்த வாரத்துக்குள்ளாக அரசின் கையிருப்பில் 8 லட்சம் கொரோனா தடுப்பூசி இருக்கும்” என்றார்.

40 மில்லியன் தடுப்பூசி…

இங்கிலாந்து அரசு ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து 40 மில்லியன் (4 கோடி) தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சென் மேரிட் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அதில், “பெல்ஜியம் உற்பத்திக் கூடத்திலிருந்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட வாகனம் யூரோ டனல் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்தது.

செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் சூழலில் அவை மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறியுள்ளார்

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter