2ம் நிலை ஊரடங்கால் 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்! – அதிர்ச்சித் தகவல்

(Image: w8media)

லண்டன், அக்டோபர் 17, 2020: லண்டனில் 2ம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஹாஸ்பெட்டாலிட்டி துறையைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தீவிர கட்டுப்பாடு நிலை 2 அமலுக்கு வந்துள்ளது.

இது கொரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், புதிய கட்டுப்பாடு காரணமாக பப், ரெஸ்டாரண்ட்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் சூழல் காரணமாக லண்டனில் மட்டும் உணவு விற்பனை சேவைத் துறையில் 2 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதைத் தொடர்ந்து நேற்று பப், ரெஸ்டாரண்ட், பியர் தோட்டங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் எப்போது இப்படி கூடுவோம் என்று தெரியாததால் பலரும் நேற்று கொண்டாடித் தீர்த்தனர்.

இன்று கட்டுப்பாடு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இந்த வாரத்தில் இருந்தே உணவு சேவைத் துறையில் வேலை இழப்பு ஏற்படலாம் என்று ரெஸ்டாரண்ட், பப் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் டால்ஸ்டனில் உள்ள ஒரு பப் உரிமையாளர் அரசு அறிவிப்பைத் தொடர்ந்து வார இறுதியில் செய்யப்பட்டிருந்த முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதால் ஒரே நாளில் 25,000 பவுண்டுகளை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவரைப் போல பலரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இது மிகப்பெரிய பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று தொழில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யு.கே ஹாஸ்பெட்டாலிட்டியின் தலைமை செயலாக்க அதிகாரி கேட் நிக்கோலாஸ் இது குறித்து கூறுகையில், “மூன்றாம் நிலைக்கு சென்றாலாவது அரசின் நிவாரணத்தைப் பெற முடியும்.

இரண்டாம் நிலையில் இருந்து கொண்டு அரசின் எந்த பொருளாதார ஆதரவையும் பெற முடியாமல் நிறுவனங்கள் பாதிப்பைச் சந்திக்கின்றன.

இதன் காரணமாக சென்ட்ரல் லண்டனில் 2 லட்சம் பேர் வேலை இழப்பைச் சந்திக்கலாம். எனவே, தற்போதைய நிலையில் அரசு நிறுவனங்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

2ம் நிலை கட்டுப்பாடு என்பது தொழில் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  உணவகங்கள் திறந்திருக்கும் ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக யாரும் வர முடியாது. 2ம் நிலை என்பது நிறுவனங்களுக்குக் கிடைத்த சாபத்தைப் போன்றது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter