ஈரான் ஹீரோ காஸ்ஸெம் சுலைமானியை கொன்ற அமெரிக்கா – தர்ம சங்கடத்தில் பிரிட்டன்

US failing to give warning of military strikes Killed qassem soleimani
US failing to give warning of military strikes Killed qassem soleimani

மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி, ஈரானிய புரட்சிகர காவல்படைத் தளபதியாவார். நேற்று( ஜன.3) பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இவர் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு இதுகுறித்து முன்னரே தகவல் தெரிவிக்காமல் சுலைமானியை அமெரிக்கா கொன்றிருப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யார் இந்த ஈரான் ஹீரோ சுலைமானி?

மேஜர் ஜென்ரல் காஸ்ஸெம் சுலைமானி, காஸ்ஸெம் சுலைமானி ஈரானின் குட்ஸ் (“ஜெருசலேம்”) படையின் நீண்டகாலத் தலைவராக இருந்தார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் கொடிய எதிரியாகக் கருதப்பட்டார்.

மேலும் படிக்க – 13 புதிய நகரங்களில் 5ஜி நெட்வொர்க் – O2 வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

ஈரானில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான சுலைமானி, மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த ஜெனரலாக அறியப்படுகிறார். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டார்.

தனது சொந்த நாட்டில் போற்றப்பட்டு, மத்திய கிழக்கு முழுவதும் போர்க்களங்களில் அவரை எதிர்க்க அஞ்சினாலும், சுலைமானி மேற்கில் பெரிதாக அறியப்படவில்லை. காஸ்ஸெம் சுலைமானியை முதலில் புரிந்து கொள்ளாமல் இன்றைய ஈரானை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்று கூறலாம். ஓமான் வளைகுடாவிலிருந்து ஈராக், சிரியா மற்றும் லெபனான் வழியாக மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரைகள் வரை பரவியுள்ள ஈரான் அதன் “எதிர்ப்பின் அச்சு” என்று சொல்லும் செல்வாக்கின் ஒரு வளைவை உருவாக்குவதற்கு சுலைமானி முக்கிய பங்காற்றியவர்.

1980 களில், இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டு பிரச்சாரங்களுக்குப் பொறுப்பான புரட்சிகர காவல்படையின் உயரடுக்கு குட்ஸ் படையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற நடந்த ஈராக் உடனான ஈரானின் நீண்ட போரின் சுலைமானி உயிர் தப்பினார்.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு வரை ஈரானில் பெரிதாக அறியப்படாத சுலைமானி, அமெரிக்க அதிகாரிகள் அவரைக் கொல்ல அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் பிரபலமடைந்தார். ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு, சுலைமானி  ஈரானின் மிகவும் பிரபலமான போர்த் தளபதியாக உருவெடுத்தார். அரசியலில் நுழைவதற்கான அழைப்புகளை புறக்கணித்தார். ஆனால் குடிமக்களின் தலைமையாக பதவியேற்கும் அந்த பதவியை விட சக்தி வாய்ந்த ஆளுமையாக மாறினார்.

ஈராக்கின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் அவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பது தெரியவந்தபோது, 2018 முதல் சுலைமானி தனது செல்வாக்கை பிராந்தியத்தில் பகிரங்கமாகப் பயன்படுத்தினார். அவர் எப்போதும் பாக்தாத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறார்.

சமீபத்திய ஆண்டுகளில், சுலைமானி இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ஃபாலோயர்களை பெற்றுள்ளார். 2013 முதல் சிரிய மோதலில், ஈரான் தலையீட்டின் பொது முகமாக இருந்த  சுலைமானியின் போர்க்கள புகைப்படங்கள், ஆவணப்படங்கள், மியூசிக் வீடியோ போன்றவை பிரபலமாகின. அனிமேஷன் படத்தில் கூட தோன்றியபோது அவரது செல்வாக்கு உச்சத்துக்கு சென்றது.

AFP இன் கூற்றுப்படி, அக்டோபரில் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அரிய நேர்காணலில், 2006 இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போரின்போது தான் லெபனானில் இருந்ததாகவும், மோதலை மேற்பார்வையிட அங்கிருந்ததாகவும் சுலைமானி கூறியிருந்தார்.

ஈரான்போல் மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகம் 2018 இல் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சுலைமானியின் பாப்புலாரிட்டி ரேட்டிங் 83 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் ஆகியோரை விட இந்த சதவிகிதம் அதிகமாகும். லெபனானின் ஹெஸ்பொல்லா மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுடனான ஈரானின் உறவுகளுக்கு மேற்கத்திய தலைவர்கள் சுலைமானியை மையமாக பார்த்தனர்.

ஈரானின் கடுமையான “ஹிஜாப்” எனும் ஆடை விதி பிரச்சனை தீவிரமான போது கருத்து தெரிவித்த சுலைமானி, “நாம் தொடர்ந்து ‘கெட்ட ஹிஜாப்’ மற்றும் ‘நல்ல ஹிஜாப்’ , சீர்திருத்தவாதி அல்லது பழமைவாதி போன்ற சொற்களைப் பயன்படுத்தினால்… யார் தான் மிச்சம் இருப்பார்கள்? அவர்கள் அனைவரும் மக்கள் தான். உங்கள் குழந்தைகள் அனைவரும் மதத்தை பின்பற்றுகிறார்களா? எல்லோரும் ஒரே போன்று தானா? இல்லை. ஆனால் தந்தை அவர்கள் அனைவரையும் ஈர்க்கிறார்” என்று சுலைமானி 2017ம் ஆண்டு உலக மசூதி தினத்தை குறிக்கும் உரையில் கூறினார்.

முதல் முப்படை தளபதியை நியமித்த இந்தியா – பிரிட்டனில் இந்த பதவி இருக்கா?

மார்ச் 11, 1957 இல் பிறந்த சோலைமணி, ஈரானின் தென்கிழக்கில் உள்ள கெர்மன் மாகாணத்தின் மலைகளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராமம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அவர் ஈரானிய மத தலைநகரான கோமில் பிறந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அவரது குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஈரானிய தகவலின் படி, சுலைமானியின் தந்தை ஒரு விவசாயி. ஷா முகமது ரெசா பஹ்லவியின் கீழ் ஒரு சிறு நிலத்தை சுலைமானி தந்தை  பெற்றார். ஆனால் அதன் பின்னர் கடன்களால் சூழப்பட்டார்.

13 வயதாக இருந்தபோது, சுலைமானி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் கெர்மன் நீர் அமைப்பின் பணியாளராக இருந்தார். ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சி, ஷாவை அதிகாரத்திலிருந்து வென்றதும், சுலைமானி புரட்சிகர காவல்படையில் சேர்ந்தார். புரட்சியைத் தொடர்ந்து குர்திஷ் அமைதியின்மையைக் குறைக்கும் சக்திகளுடன் அவர் ஈரானின் வடமேற்குக்கு அனுப்பப்பட்டார். பின்னர், ஈரான் மீது ஈராக் படையெடுத்து இரு நாடுகளையும் நீண்ட, இரத்தக்களரியாக்கும் எட்டு ஆண்டு யுத்தத்தைத் தொடங்கியது. இந்த சண்டை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது.

பிரிட்டனுக்கு சிக்கல்

ஈரானின் ஹீரோ, ஈரானின் மேஜர் ஜென்ரல் சுலைமானியை கொன்ற அமெரிக்க வான்வழித் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று அமெரிக்காவின் நட்பு நாடான இங்கிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய கிழக்கில் தனது நலன்களைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முனைப்பு காட்டி வந்த நிலையில், சுலைமானி கொல்லப்பட்டிருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ” சுலைமானி தலைமை வகித்த ஈரானிய குட்ஸ் படை முன்வைக்கும் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை அரசாங்கம் எப்போதும் அங்கீகரித்துள்ளது” என்றார்.

நிலைமையின் தீவிரத்தை குறைக்க அனைத்து கட்சிகளையும் அழைத்த அவர், “மேலும் மோதல்கள் வளருவதில் நமக்கு ஆர்வமில்லை” என்றார்.

கடந்த பாராளுமன்றத்தில் பேசிய வெளியுறவுக் குழுவின் தலைவரான டாம் துஜெந்தாட், “இதுபோன்ற முடிவுகளை இங்கிலாந்துக்கு முன்கூட்டியே தெரிவிக்க அமெரிக்கா வழக்கமாக தவறவிடுகிறது” என்று புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில், சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனை பெரும் சிக்கலிலும், பெரும் சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது அமெரிக்கா.