வாகனம் ஓட்டும்போது போனைத் தொட்டா 200 பவுண்ட் அபராதம்… வருகிறது புதிய சட்டம்!

(Image: standard.co.uk/PA)

லண்டன், அக்டோபர் 17, 2020: வாகன விபத்தைத் தவிர்க்கும் வகையில் கார் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுவதை போலீசார் கண்டறிந்தால் அவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கும் சட்டம் வர உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு இயற்றப்பட உள்ள சட்டத்தின் மூலம் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவது சட்டவிரோதமாகிவிடும்.

இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டில் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.

புதிய சட்டத்தின் கீழ் ஹேண்ட்ஸ் ஃப்ரீயும் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் 2019ம் ஆண்டில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்தியதால் 637 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேருக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது.

வாகனம் ஓட்டும் போது போனை பயன்படுத்தி மாட்டிக் கொண்ட பலரும் தாங்கள் போன் பேசவில்லை, போட்டோதான் எடுத்தேன், அல்லது ஹேண்ட் ஃப்ரீ போட்டேன், வீடியோ ஆன் செய்தேன் என்று கூறி தப்பிவிடுகின்றனர்.

தற்போதைய சட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் பற்றிய குறிப்பு இல்லை. இதனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பி விடுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு போன் பயன்படுத்தியதால் விபத்தில் சிக்கிய ராம்சே பாரெட்டோ என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த வழக்கின் விசாரணையின் போது தற்போதைய சட்டம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து சாலை கொள்கைகள் ஆர்.ஏ.சி ஹெட் நிக்கோலஸ் லைஸ் கூறுகையில், “சட்டத்தின் ஓட்டைகளை அடைப்பது வரவேற்கத்தக்கது.

வாகனத்தை இயக்கும்போது மொபைல் போனை பயன்படுத்துவது சாலை பாதுகாப்பில் அபயாத்தை ஏற்படுத்துகிறது.

சாலை பாதுகாப்பை அதிகரிக்க மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது உள்ளிட்ட பலவற்றை இன்னும் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தின் கீழ்…

வாகனம் ஓட்டும் போது போனை பயன்படுத்துவது சட்ட விரோதம். ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்தலாம்.

ப்ளுடூத் ஹெட் செட், வாய்ஸ் கமாண்ட், பில்ட் இன் சாட் நவ் பயன்படுத்தலாம். இவை எதுவும் வாகனம் இயக்கும் போது சாலையை, போக்குவரத்தை மறைக்கும் வகையிலோ திசை திருப்பும் வகையிலோ இருக்கக் கூடாது.

புதிய விதியானது போக்குவரத்து சிக்னல், மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் வரிசையில் நிற்கும் போதும் கூட பொருந்தும்.

எப்போது போனை பயன்படுத்தலாம்?

மிக பாதுகாப்பாக பார்க் செய்த பிறகு பயன்படுத்தலாம்.

வாகனத்தை நிறுத்த முடியவில்லை, பாதுகாப்பின்மை, மிக அவசரம் என்ற நிலையில் பயன்படுத்தலாம்.

தண்டனை:

வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்தியது உறுதியானால் 6 பெனாலிட்டி புள்ளிகள் மற்றும் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

சாலை சரியாக தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தால் கூடுதலாக 3 பெனாலிட்டி புள்ளிகள் வழங்கப்படும்.

குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவீர்கள்… அங்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படலாம்.

அல்லது அதிகபட்சம் 1000 பவுண்ட் (லாரி, பஸ் ஓட்டுபவராக இருந்தால் 2500 பவுண்ட்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter