கொரோனா: 1150 பேரை தூக்கும் வெர்ஜின் அட்லான்டிக் நிறுவனம்!

Virgin Atlantic
(Image: Virgin Atlantic)

லண்டன், 4 செப்டம்பர் 2020: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க 1,150 பேரை வேலையில் இருந்து தூக்குவது என்று வெர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் தடைபட்ட காரணத்தால் நிறுவனங்களும் ஆட்குறைப்பு, கிளைகள் மூடல் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஏராளமானோர் வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு என்று பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

தற்போது சூழல் சரியாகி வரும் நிலையில் வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் புதிதாக 1150 பேரை வேலையில் இருந்து தூக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அந்த நிறுவனம் 3500 பேரை வேலையில் இருந்து தூக்கியிருந்தது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெர்ஜின் அட்லான்டிக்ஸ் நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர்.

ஊரடங்குக்குப் பிறகு 3500 பேரை வேலையில் இருந்து தூக்குவதாக அறிவித்தது. அப்படி செய்யும் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

1150 பேரை வேலையில் இருந்து தூக்குவதன் மூலம் மிச்சமாகும் 1.2 பில்லியன் பவுண்ட் கொண்டு அடுத்த 18 மாதங்களுக்கு நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும் என்று திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் உயிரைக் காப்பாற்ற செலவுகளைக் குறைத்தாக வேண்டியது கட்டாயம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில், “விமான போக்குவரத்து ஓரளவுக்கு நல்ல நிலைக்குத் திரும்பும் வரை நிறுவனத்தைக் காப்பாற்ற செலவுகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆறு மாதம் வெர்ஜின் அட்லான்டிக்ஸ் தொழில் வரலாற்றில் மிகவும் சவாலான காலமாக இருந்தது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க சில அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளது.

உடனடியாக யாரையும் வேலையில் இருந்து விடுவிக்கவில்லை, இன்றில் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 45 நாட்களுக்கு கன்சல்டேஷன் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தொழிலாளர் பாதுகாப்பு திட்டம் அக்டோபரில் முடிவடையும் நிலையில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வேலை இழப்பைத் தவிர்க்க அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter