இங்கிலாந்தின் பெரும் பகுதிகளில் கொரோனா பரவலில் வீழ்ச்சி! – ஓ.என்.எஸ்

Virus levels falling, கொரோனா, தடுப்பூசி
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவப் பணியாளர் (Image: expressandstar.com)

இங்கிலாந்தின் பெரும் பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று ஓ.என்.எஸ் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்ற நல்ல விஷயத்தை தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் வட கிழக்கு பகுதி தவிர்த்து மற்ற எல்லா பகுதிகளிலும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகள் எண்ணிக்கை மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது என்று ஓ.என்.எஸ் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 28ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 105ல் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 85 பேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்தது.

ஓ.என்.எஸ் வெளியிட்ட தகவல் படி வடக்கு அயர்லாந்தில் 190க்கு ஒருவரும், வேல்ஸில் 170க்கு ஒருவரும், ஸ்காட்லாந்தில் 130ல் ஒருவரும், இங்கிலாந்தில் 105ல் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்படுகிறது.

அதே போல் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆர் எண் விகிதம் ஒன்றுக்கு கீழாக உள்ளது. இந்த வாரத்தில் 0.8 முதல் 1 என்ற அளவிலேயே ஆர் விகிதம் இருந்துள்ளது.

அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கை காரணமாக கொரோனாத் தொற்று சுருங்கிக் கொண்டே செல்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல் இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடு எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளது என்பதை காட்டுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இரண்டாம் அலை பரவலின் சரிவில் நாம் தற்போது உள்ளோம். தினசரி கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவதை காண்கிறோம்.

இதன் காரணமாக கிறிஸ்துமஸ் சமயத்தில் கட்டுப்பாடுகளில் இருந்து சிறிது தளர்வுகள் வழங்கப்படுவதால் எந்த பாதிப்பும் வராது” என்றார்.

கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ள சூழலில், வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை யொட்டி அடுத்த வாரத்துக்குள்ளாக எட்டு லட்சம் யூனிட்கள் வரும் என்று அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்படும் சூழலில் தொற்றின் வேகம் குறைந்திருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter