கிளாஸ்கோவில் இன்று நள்ளிரவு முதல் கடுமையாகும் லாக்டவுன் விதிகள்!

Glasgow , கிளாஸ்கோ, கொரோனா
(Image: news.sky.com)

கிளாஸ்கோ, 1 செப். 2020: கொரோனாத் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கிளாஸ்கோ நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் நிக்கோலா கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அங்கு இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இந்த கட்டுப்பாடு கிளாஸ்கோ நகரம் மற்றும் மேற்கு டன்பர்டன்ஷைர் மற்றும் கிழக்கு ரெஃப்ஷைர் ஆகிய பகுதிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இன்று இரவுக்குப் பிறகு பொது மக்கள் லாக்டாவுன் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதன் படி, இந்த மூன்று பகுதியில் உள்ளவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்கு செல்லக் கூடாது.

அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் செல்வதில் தடையில்லை.

இந்த மூன்று பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொரேனா தொற்று இருந்தால் தங்களைத் தாங்களே 14 நாள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர்களுக்குத் தேவையான உதவியை கவுன்சில் வழங்கும்.மருத்துவமனைகள் மற்றும் கேர் ஹோம்களுக்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் செல்லலாம்.

ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஏன் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதைப் பற்றி மக்களுக்கு விரிவாக கூறியுள்ளார்.

மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், ஏழு நாள் முடிந்த பிறகு நிலைமை பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த முடிவு மிகச் சாதாரணமாக எடுக்கப்பட்டது இல்லை. அவர்கள் வழிகாட்டுதல்களை உருவாக்குகின்றனர். ஆனால் அது தேவையா என்பதைப் பற்றி நாம் பரிசீலனை செய்கிறோம்.

தேவை எனில் அதை கடுமையாக பின்பற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கிறோம். தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திறன்பட செயல்படவில்லை என்று கண்டறியப்பட்டால் இதைவிட கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த லாக்டவுன் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் அதிகப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதை, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

கிளாஸ்கோ நகரவாசியாக இருப்பதால் மக்கள் இதை வரவேற்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இது கடினமானதாக இருக்கலாம், ஆனால் தேவையானது” என்றார்.

ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்ட 154 கொரோனாத் தொற்றில் 66 தொற்று கிளாஸ்கோ நகரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவே கிளாஸ்கோ மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த காரணமாக அமைந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்காட்லாந்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.

பள்ளிகளில் குறைந்து வரும் வருகைப் பதிவு:

ஸ்காட்லாந்தில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆகஸ்ட் 17ம் தேதி 95.8 சதவிகிதமாக இருந்த வருகைப் பதிவு ஆகஸ்ட் 28ம் தேதி 84.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட 22 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதற்கு காரணம் கொரோனாத் தொற்று பரவல் அச்சம் என்று கூறப்படுகிறது. தற்போது கிளாஸ்கோவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter