லண்டனில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணம்… மான்செஸ்டரில் பார்டி கொண்டாடியவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்!

Old Kent Road, விதிமுறை
பழைய கென்னட் சாலை (Image: Google Street)

கொரோனா கட்டுப்பாடு விதிமுறை மீறி 250க்கும் மேற்பட்டோர் கூடியதால் லண்டனில் திருமண விழா ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது. மான்செஸ்டரில் வீட்டில் பார்ட்டி கொண்டாடியவருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் மிக ரகசியமாக நடந்த திருமண வழா ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தென் கிழக்கு லண்டனில், பழைய கென்ட் சாலையில் உள்ள ஒரு இடத்துக்கு அதிகமாக மக்கள் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்த போது அந்த இடத்தின் முன்பக்க கதவு மூடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பலரும் வந்திருப்பதற்கான கொண்டாட்ட சூழல் அங்கு இருந்தது.

சோதனை செய்து பார்த்த போது உள்ளே 200க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். சமூக இடைவெளி இன்றி, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றாமல் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த கூட்டத்தை போலீசார் வெளியேற்றினர். கூட்டத்தை ஏற்பாடு செய்தவருக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீர விசாரித்து அவர்களுக்கான அபராதம் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் நிக்கி அரோஸ்மித் கூறுகையில், “இந்த நிகழ்ச்சி ஒரு அப்பட்டமான விதிமுறை மீறல் ஆகும். இது வைரஸ் கிருமியை பரப்பும் மையமாக இருந்திருக்கலாம்.

அரசு வழிகாட்டலுக்கு எதிராக அந்த இடத்தில் 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர். சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக அவர்கள் இருந்தனர்.

திருமணத்தைத் திட்டமிடுபவர்கள் தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப திருமணம் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆபத்து காலத்தில் மற்றவர்களின் வாழ்வில் ஆபத்தை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது” என்றார்.

சில தினங்களுக்கு முன்பு இப்படி விதிமுறையை மீறி திருமண வரவேற்பில் மக்கள் கூடியதால், கட்டிட உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மான்செஸ்டரில் வீட்டில் 50க்கும் மேற்பட்டோரை அழைத்து பார்டி கொடுத்த நபருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டரில் 3ம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஃபிளாட் வீட்டில் இசை நிகழ்ச்சி, விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு சென்று அதை தடுத்து நிறுத்திய போலீசார், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதித்தனர்.

அங்கு மூன்றாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வந்ததிலிருந்து விதிமுறையை மீறியதாக 52 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter