லண்டனில் புதிய நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாடு… எதுக்கு எல்லாம் தடை தெரியுமா?

கொரோனா

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக லண்டன் உள்ளிட்ட பகுதிகள் புதிய நான்காம் நிலை ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் இன்று நள்ளிரவு முதல் செல்கின்றன. இதை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 00.01 முதல் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இது கடந்த நவம்பர் மாதம் அமலில் இருந்த முழு ஊரடங்கைப் போன்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் லண்டன் (அனைத்து 32 பெரு நகரங்களும்), கென்ட், பக்கிங்ஹாம்ஷையர் (மில்டன் கெய்னஸ் உள்பட), பெர்ஷையர், சர்ரே (வேவர்லியைத் தவிர்த்து), கோஸ்போர்ட், ஹவந்த், போர்ஸ்மவுத், ரோதர், ஹேஸ்டிங் ஆகிய பகுதிகள் நான்காம் நிலை ஊரடங்குக்குள் செல்கின்றன.

கிழக்கு இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் (கொல்செஸ்டர், உட்டில்ஃபோர்ட், டெண்டரிங் பகுதிகள் தவிர்த்து), பீட்டர்பரோ ஆகிய பகுதிகளும் நான்காம் நிலை ஊரடங்குக்குள் செல்கின்றன.

4ம் நிலை கட்டுப்பாடு விதிகள் என்ன…

கல்வி, வேலையைத் தவிர்த்து அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

வீட்டைச் சாராத ஒரு நபரை மட்டும் வீட்டுக்கு வெளியே சென்று சந்திக்கலாம்.

சலூன், நகம் பராமரிப்பு, உள் அரங்கு பொழுதுபோக்கு என அனைத்து அத்தியாவசியமற்ற கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

பிரிந்த தம்பதியர்கள் தங்கள் குழந்தைகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா நான்காம் நிலை பகுதியைச் சார்ந்தவரை மற்ற மூன்று நிலையில் உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் சந்திப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த புதிய நான்காம் நிலை கட்டுப்பாடு பற்றி வருகிற 30ம் தேதி மறு ஆய்வு செய்யப்படும்.

எந்த பகுதிக்கு எந்த கட்டுப்பாடு நிலை என்பது அந்த பகுதியின் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, தொற்று ஏற்பட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர், கொரோனா தொற்று உயர்வு மற்றும் குறைவு, தேசிய சுகாதார சேவை மீதான கொரோனா நோயாளிகள் கொடுக்கும் அழுத்தம் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.

30ம் தேதி கொரோனா தொற்று குறைந்திருந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். இருப்பினும் ஜனவரி மாதம்தான் கொரோனா முழு சுய ரூபம் தெரியவரும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்திலும் கிறிஸ்துமஸ் கொரோனா தளர்வு என்பது ஐந்தில் இருந்து ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் முதல் அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

யு.கே.வின் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் மீண்டும் இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகள் அமல் ஆவதற்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் வெளிப்பட்ட புதிய வகை வைரஸ் தற்போது ஸ்காட்லாந்திலும் பரவத் தொடங்கியிருப்பது அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter