நியூ பிரைட்டன்: கடல் அலையில் சிக்கிய பெண் பரிதாப பலி!

Credit: Liverpool Echo

நியூ பிரைட்டனில் கடல் சீற்றம் காரணமாக அலையில் சிக்கிய பெண் நீண்ட மீட்புப் பணிக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் அலையில் சிக்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நியூ பிரைட்டனில் இன்று பிற்பகல் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 20 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரும் கிங்ஸ் பரேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடல் கொந்தளிப்பு மற்றும் ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். கடல் அலை ஆக்ரோஷமாக இருந்ததால் அவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.

கடலோர பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் உடனடியாக வரவழைக்கப்பட்டது. இதில், அந்த பெண்மணி உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார். இளைஞர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை இயல்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்புப் படை, போலீஸ் மற்றும் நார்ஸ் வெஸ்ட் ஆம்புலன்ஸ் சேவை இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் நாய் ஒன்றும் வந்துள்ளது. அதுவும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் பத்திரமாக அது மீட்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், “பலரும் கடற்கரையில் கூடுவதைப் பார்த்து வந்தோம். அப்போது கடலில் ஒரு பெண் சிக்கித் தவிப்பதை கண்டோம். கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. துணை மருத்துவப் படையினர் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினரால் கூட அவர்கள் அருகில் செல்ல முடியவில்லை” என்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நபர்கள் மற்றும் ஒரு நாய் மீட்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு சொல்லப்பட்டுள்ளது. 20 வயது இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாய் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகம் ஏதும் இல்லை. இருப்பினும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.