புற்றுநோய் என நாடகமாடி 45 ஆயிரம் பவுண்ட்டை சுருட்டிய பலே பெண்!

Woman, guilty, fake, புற்றுநோய், cancer
(Image: PA Media)

தனக்கு புற்றுநோய் உள்ளது என்று கூறி பொது மக்களிடமிருந்து 45 ஆயிரம் பவுண்ட் நிதி வசூலித்து கேளிக்கையில் ஈடுபட்ட பெண்ணின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கென்ட், பிராட்ஸ்டேர்சச் சார்ந்தவர் நிக்கோல் எல்கபாஸ். சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அதிகரித்து வரும் கடன் மற்றும் சூதாட்டத்துக்கு தேவையான பணத்தை எப்படி பெறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது GoFundMe என்ற பொது மக்களிடமிருந்து நிதி உதவி பெறும் பக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். எனவே, தனக்கு புற்றுநோய் இருப்பதாக 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

42 வயதான 11 வயது மகனின் அன்பான அம்மாவுக்கு புற்றுநோய் சிகிச்சை பெற உங்கள் அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது என்று அறிவிப்பை வெளியிட்டார்.

புற்றுநோய், மோசடி
மோசடியில் ஈடுபட்ட பெண் (Image: PA Media)

மேலும், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவது போன்ற உருக்கமான படத்தை அவர் வெளியிட்டிருந்தார். இதை உண்மை என்று நம்பி பலரும் அவருக்கு நிதி உதவி செய்தனர். இப்படி அவருக்கு 45 ஆயிரம் பவுண்ட் நிதி கிடைத்துள்ளது.

இந்த பணத்தைப் பெற்ற நிக்கோல் தன்னுடைய இஷ்டம் போல செலவு செய்து சந்தோஷமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நிக்கோலின் மருத்துவர் சமீபத்தில் நிக்கோல் செய்த தில்லுமுல்லை கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில் நிக்கோலுக்கு புற்றுநோய் பாதிப்பு எதுவும் இல்லை, புற்றுநோய் இருக்கிறதா என்று கூட அவர் பரிசோதனை செய்து கொண்டது இல்லை என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர் மீது கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதும் கூட தான் மீதான குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

மகளிர் நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாக அவர் திரும்பத் திரும்ப கூறி வந்தார். கடைசியில் அதுவும் பொய்யானது என்பது உறுதியானது.

இதைப் படிச்சீங்களா: ஊழியர்களை மிரட்டிய விவகாரம்… ப்ரீத்தி படேல் நன்னடத்தை மீறியதாக அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து தவறான தகவல் அளித்து நிதி உதவி பெற்றது உறுதியானதாக கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதி மார்க் வீக்ஸ் இது குறித்து நிக்கோலிடம் கூறுகையில், “உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் படி கஸ்டோடியல் தண்டனை வழங்கப்படும்” என்றார்.

நிக்கோலுக்கு பிப்ரவரி மாதத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கோல் மக்களின் அனுதாபத்தை ஏமாற்றி சூதாட்டத்துக்கும் பொழுதை போக்கவும் பணத்தைப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது செயல் உண்மையில் உதவி தேவைப் படுபவர்களுக்கு உதவுவதில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter