நாட்டிங்ஹாம்: எதற்காக கட்டுப்பாடு வந்தது என்று கூட உணராமல் ஆட்டம் போட்ட மக்கள்!

Youngsters, descend, Nottingham, நாட்டிங்ஹாம், கட்டுப்பாடு
கொரோனா கட்டுப்பாடு அமலாவதைத் தொடர்ந்து சாலையில் கேளிக்கையில் ஈடுபட்ட இளைஞர்கள்! (Image: mirror.co.uk / PA Media)

நாட்டிங்ஹாம் பகுதிக்கு எதற்காக 3ம் நிலை கொரோனா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற கவலை துளியும் இன்றி ஏராளமான இளைஞர்கள் சாலையில் திரண்டு கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிக அதிக எண்ணிக்கையில் தொற்று உள்ள பகுதிகளில் 3ம் நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் நாட்டிங்ஹாமில் 3ம் நிலை ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதையொட்டி நேற்று இரவு இளைஞர்கள், பொது மக்கள் அதிக அளவில் சாலைகளில் திரண்டு கடைசி நாளைக் கொண்டாடினர்.

3ம் நிலை கட்டுப்பாடு காரணமாக பப்கள் மூடப்படுகின்றன. இரவு 9 மணிக்குப் பிறகு மது வாங்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் பல கட்டுப்பாடுகள் அமலாவதால், மக்கள் அதிக அளவில் மது அருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

கொரோனா 3ம் நிலை கட்டுப்பாடுக்கு செல்வதையொட்டி சட்ட விரோதமாக ஒன்று கூடல், கேளிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டிங்ஹாம் போலீஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் சாலைகளில் கூடினர். அவர்களைக் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

இது குறித்து நாட்டிங்ஹாம் காவல்துறையின் உதவி தலைமை கான்ஸ்டபிள் கேட் மேனெஸ் கூறுகையில், “3ம் நிலை கட்டுப்பாடு என்பது உயிர்களைக் காப்பாற்றவும், தேசிய சுகாதார சேவையின் பணிச் சுமையைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டது.

இந்த முக்கிய நோக்கங்கள் நேற்றைய நிகழ்வின் மூலம் மீறப்பட்டுள்ளன. இது குளிர்காலத்தில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான மக்கள் இந்த கட்டுப்பாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாகச் சிலர் இந்த சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்ற வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கடும் கட்டுப்பாடு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில் உள்ளோம். விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடந்த வாரத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதியை மீறிய நான்கு பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.

கட்டுப்பாடு கடினம்தான், அதைப் பின்பற்றாமல் எனக்கு என்ன கவலை என்று இருந்தால், நம்மால் நம் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு வரலாம். கொரோனா வருவதற்கு முன்பு இதை உணர்ந்தால் நல்லது!

இதைப் படிச்சீங்களா: 24 வயது இளைஞனை கொலை செய்த 14 வயது மாணவி கைது!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter