இதயத்தின் ஆரோக்கியம் காக்கும் 5 உணவுகள்!

சில வகையான உணவுகள் உட்கொள்வது நமக்கு இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று நமக்கு நன்கு தெரியும். இருந்தாலும் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ளவே முடிவதில்லை. இதனால் தொந்தி பெருத்து, சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைவை எதிர்கொள்கிறோம். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரிந்துகொண்டோம் என்றால், நல்லதை சாப்பிட்டால் நம்முடைய இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

உணவுகள் நம்முடைய உடலின் ரத்த அழுத்தம், டிரைகிளசரைட், கொலஸ்டிரால் அளவு அதிகரிப்பு என்று பல்வேறு விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதயத்துக்கும் இதம் அளிக்கும் சில உணவுகளைப் பற்றி இங்கு பார்ப்போம்!

முழு தானியம்:

நம் ஊரில் முன்னோர்கள் பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொண்டனர். வசதி வாய்ப்பு வரவர அரிசி பாலிஷ் செய்யப்பட்டு வெள்ளையாக்கப்பட்டது. வேறு வேறு நாடுகளுக்கு செல்லும்போது அந்த நாட்டு உணவு முறைக்கு மாறி கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றுக்கு மாறிவிட்டோம். கோதுமை, ஒட்ஸ் கெடுதல் இல்லை என்றாலும் அது முழுதானியமாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். கோதுமையின் மேல்புறத்தை நீக்கிவிட்டு அதுவும் வெள்ளையாக கொடுக்கப்படுகிறது. சிவப்பு, பழுப்பு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவற்றின் தோல் பகுதியில்தான் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் உள்ளன. முழு தானியத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதை எடுத்துக்கொள்ளும்போது எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைகிறது. உணவில் அதிக அளவில் முழு தானியத்தை சேர்த்துக்கொள்பவர்க்கு இதய நோய்க்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, இனி பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முழு தானியம், முழு கோதுமை, முழுதானிய பொருட்கள் என உள்ளதா என பார்த்து வாங்குங்கள்.

அவகேடோ:

அவகேடோவில் இதயத்தைக் காக்கும் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உடலில் கொழுப்பைக் குறைக்கும் உணவுகளை தொடர்ந்து 45 நாட்கள் எடுத்து வந்தால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உடல் எடை குறைக்க, இதயம் ஆரோக்கியம் மேம்பட விரும்புகிறவர்கள் அவகேடோவை எடுத்துக்கொள்ளலாம். அவகேடோவில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒரு அவகேடோ பழத்தில் 975 மி.கி பொட்டாஷியம் உள்ளது. அதாவது நம்முடைய உடலுக்குத் சராசரியாக ஒரு நாளைக்குத் தேவைப்படுவதில் 28 சதவிகிதம்.

எண்ணெய் சத்து மிக்க மீன்கள்:

சாலமென் போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை காக்கக் கூடியதாகும். ஒரு ஆய்வில் 324 பேருக்கு வாரத்துக்கு மூன்று முறை என எட்டு வாரத்துக்கு சாலமென் மீன் உணவு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. எட்டாவது வாரத்தின் முடிவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் இயல்புநிலைக்கு வந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உணவில் சாலமென் போன்ற எண்ணெய் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். முடியாதவர்கள் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவைக் குறைத்து, ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

வால்நெட்:

வால்நெட்டில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. மேலும் மக்னீஷியம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுஉப்பும் நிறைவாக உள்ளது. தினமும் சிறிதளவு வால்நெட் எடுத்துக்கொள்வது இதயத்தில் கெட்ட கொழுப்பான எல்.டி.எல் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தமும் 2 முதல் 3 எம்எம் எச்.ஜி குறைகிறது. தினசரி சிறிதளவு வால்நெட் சாப்பிடுவது இதய  நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

தக்காளி:

தக்காளியில் லைக்கோபீன் என்ற நிறமி உள்ளது. இது மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக செயல்படுகிறது. இது இதயத் திசுக்களில் ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் பாதிப்புகளைக் குறைத்து இதயத்தைக் காக்க உதவுகிறது. லைக்கோபீன் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நல்ல கொழுப்பு எனப்படும் எச்.டி.எல் அளவு அதிகரிக்கவும் இது உதவுகிறது. எச்.டி.எல் அளவு அதிகரிப்பது ரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk