இங்கிலாந்தில் ஒரே நாளில் 1000ஐ கடந்த கொரோனா உயிர் பலி!

Matt Hancock, கொரோனா
மெட் ஹென்காக்

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 1000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்தைக்  கடந்த கொரோனா, இன்று புதிய உச்சமாக 62,322 பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் உயிர் பலி 1000ஐ கடந்துள்ளது.

அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் படி 1041 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு உயிரிழப்பு இப்போதுதான் 1000ஐ கடந்துள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் இது குறித்து கூறுகையில், “தற்போது இங்கிலாந்து மருத்துவமனைகளில் 30,074 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு ஊரடங்கு கொண்டுவரப்படவில்லை என்றால், மேலும் அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். அவர்களுக்கு ரேஷன் முறையில்தான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகும்.

கொரோனா உறுதியாகி 28 நாட்களுக்குள் உயிரிழக்கும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வர முடியாமல் ஆம்புலன்ஸ் சேவை திணறி வருகிறது.

இப்போது நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், என்.ஹெச்.எஸ் பணியாளர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகும்” என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற விவாதம் நடந்து வருகிறது.

இந்த விவாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் ஆகியோர் விளக்கம் அளித்து வருகின்றனர். இன்று மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.

இதற்கிடையே லண்டனில் கொரோனா ஊரடங்கை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு பலரும் அழைப்புவிடுத்து வருகின்றனர். இப்படி போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்றும், முகக் கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், சமூக ஒன்றுகூடல், சட்டவிரோத இசை நிகழ்ச்சி, பார்ட்டி போன்றவை நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter