இங்கிலாந்தின் புதிய கொரோனா முழு ஊரடங்கு விதிமுறைகள் பற்றிய அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இரவு எட்டு மணி அளவில் வெளியிட உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா இரண்டாம் அலைப் பரவலுடன் புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவலும் இணைந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மூன்று மற்றும் நான்காம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
இந்த கட்டுப்பாடு புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்று நிபுணர்கள் கூறினர். அரசு இதைத் தடுக்க எதையும் செய்யவில்லை என்றால், மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற வகையில் பிபிசி-க்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூடுதல் கட்டுப்பாடுகள் பற்றி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த மார்ச் மாதம் அமலில் இருந்த முழு கட்டுப்பாட்டைப் போல இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் படி முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல் உள்ளிட்டவை அறிவிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றை இன்று இரவு முதலே மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
புதிய விதிமுறைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் புதன்கிழமை இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நாடு தழுவிய முழு ஊரடங்கை 24 மணி நேரத்தில் போரிஸ் ஜான்சன் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சியான லேபர் கட்சி வலியுறுத்தி வந்தது.
இதனால், புதிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.
இங்கிலாந்தில் இன்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தொடர்ந்து ஏழாவது நாளாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே ஸ்காட்லாந்தில் வீடுகளிலேயே மக்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிப்ரவரி வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் முதல்வர் நிக்கோலா அறிவித்துள்ளார்.
இதே போன்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடு இங்கிலாந்து பகுதியிலும் அமலாகும் என்றே தெரிகிறது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…