ஊரடங்கை மீறி ஜாகிங்… சர்ச்சையில் சிக்கிய ஆர்யா!

நன்றி: ட்விட்டர்

தமிழ்நாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் காலையில் ஜாகிங் சென்றதாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடில் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளதால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். நடிகர் ஆர்யா இன்று (ஜூலை 5ம் தேதி) காலை 18 கி.மீ தூரத்துக்கு ஜாகிங் சென்றதாக படத்துடன் பதிவிட்டுள்ளார். காலை 5.30 மணி அளவில் 2 மணி நேரம் ஜாகிங் பயிற்சியில் ஈடுபட்டதாக மேப் உடன் பதிவிட்டுள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் அவர் வாங்கிங் சென்றிருப்பது மேப்பை பார்க்கும்போதே தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முதியவர் ஒருவர் காலை வாக்கிங் சென்றதற்காக அபாரதம் விதிக்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறியும் கொரோனா காலத்தில் வெளியே நடமாடத் தடை உள்ள நிலையில் வாங்கிங் வந்தது தவறு என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. தடையை மீறி ஜாகிங், வாக்கிங் சென்றவர்களிடமிருந்து இதுவரை 1 கோடி ரூபாய் வரைக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இப்போது முழு ஊரடங்கு உள்ள ஞாயிற்றுக் கிழமை காலையில் 2 மணி நேரம் ஜாகிங் செய்தேன் என்று ஆதாரத்தோடு ஆர்யா பதிவிட்டுள்ளார். அவர் மீது சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆர்யாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.