ஸ்பெயின், ஜெர்மனியில் உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குவாரன்டைன் தேவையில்லை!

இங்கிலாந்து
விமானநிலைய பயணிகள்

ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து வருபவர்கள் ஜூலை 10 முதல் தங்களை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பீதியில் இருக்கும் நிலையில் இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் குவாரன்டைன் எனப்படும் இரண்டு வார சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய பிறகே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் சுய தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். முதல் கட்டமாக 50 நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்பட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்துத் துறை செயலாளர் கிரான்ட் ஷேப்ஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன் படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி இரண்டு வார சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக வேண்டாம். அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். இந்த புதிய தளர்வு ஜூலை 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சர்வதேச பயணிகளுக்கான தளர்வு என்பது இங்கிலாந்தைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லர்ந்திலும் அறிவிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.