லண்டன் தேம்ஸ் நதியில் சுறா? – வைரல் ஆகும் புகைப்படம்

London Eye, Shark fin, River Thames

ண்டன் தேம்ஸ் நதியில் லண்டன் ஐ அருகே சுறா மீன் தென்பட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை லண்டன் துறைமுக நிர்வாகம் மறுத்துள்ளது.

வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் லண்டன் தேம்ஸ் நதியில் லண்டன் ஐ, நாடாளுமன்ற கட்டிடம் அருகே சுறா மீன் தென்பட்டது என்று புகைப்படம் ஒன்றை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த படத்தில் சுறா மீன் துடுப்பு போன்ற உருவம் தென்படுகிறது. ஆனால், அது சுறா மீன் போல இல்லை. ஆனால், மக்கள் அதிர்ச்சியுடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

யாஸ்மின் டின் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர் வெளியிட்ட பதிவில், “இன்று சென்ட்ரல் பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். தேம்ஸ் நதியைப் பார்த்த போது… இது என்ன சுறாவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் 100 சதவிகிதம் உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து லண்டன் துறைமுக நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த படம் தெளிவின்றி உள்ளது. தண்ணீரின் நடுவே இருட்டாக ஏதோ ஒரு பொருள் தென்படுகிறது. அது குப்பை அல்லது உடைந்த மரமாக இருக்கலாம். தேம்ஸ் நதியில் சுறா போன்ற மீன் வகைகள் வந்ததாக எங்கள் நிர்வாகம் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இருப்பினும் அந்த படம் என்ன என்று உறுதியாக எங்களால் சொல்ல முடியாது. உறுதியான ஆதாரங்கள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கலாம்” என்றனர்.

சிறிது நேரம் கழித்து இது தொடர்பாக துறைமுகம் சார்பில் மார்டின் காரிசைட் நிருபர்களிடம் கூறுகையில், “தானும் தன்னுடைய நண்பர்களும் இணைந்து போலியாக இதை உருவாக்கியதாக இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார். ஊடகங்களை ஏமாற்ற அப்படி செய்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார். தேம்ஸ் நதியில் எப்போதும் சுறா மீன் தென்பட்டது இல்லை” என்றார்.

இது தொடர்பாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். “லண்டன் தேம்ஸ் நதியில் சுறா மீன் தென்படுவது எல்லாம் வாய்ப்பே இல்லை. நீர்நாய்கள் அவ்வப்போது தென்பட்டது உண்டு. சில முறை கப்பல் மோதிய விபத்து காரணமாக திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது உண்டு. 2006ம் ஆண்டு ஐந்து மீட்டர் நீளம் கொண்ட பாட்டில்நோஸ் திமிங்கிலம் கரை ஒதுங்கியது” என்றனர்.