லெபனானுக்கு மேலும் 20 மில்லியன் பவுண்ட் உதவி! – இங்கிலாந்து உறுதி

(Image: twitter.com/JimLeitrim1)

அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு இங்கிலாந்து மேலும் 20 மில்லியன் பவுண்ட் நிதி உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வாரம் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை இழந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 3 லட்சம் பேர் வீடிழந்தவர்கள் ஆகினர்.

லெபனானுக்கு உலக நாடுகள் உதவிகளை அறிவித்து வருகின்றனர். லெபனான் மக்களுடன் துணையாக நிற்கும் வகையில் இங்கிலாந்து ஏற்கனவே ஐந்து மில்லியன் பவுண்ட்களை லெபனானுக்கு வழங்கியது. தற்போது மேலும் 20 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் குழு லெபனான் தலைநகர் பெய்ரூட் வந்தது. அவர்கள் பாதிப்பு, தேவைப் பற்றி அரசுக்கு அளித்த தகவல் அடிப்படையில் கூடுதல் உதவி வழங்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சனிக்கிழமை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், லெபனான் அதிபரைத் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, இந்த சோதனையான நேரத்தில் பிரிட்டன் மக்கள் லெபனானுக்கு துணையாக நிற்பார்கள் என்று தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்ததுமே இங்கிலாந்து ஐந்து மில்லியன் பவுண்ட் உதவி அறிவித்தது. இதில் மூன்று லட்சம் பவுண்ட் இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவுத் திட்டத்தின் கீழ் உதவி வழங்க லெபனானுக்கு 20 மில்லியன் பவுண்ட் வழங்கப்படுகிறது.

லெபனான் துறைமுகத்தில் 2000 டன் அமோனியம் நைட்ரேட் இருந்ததாக கூறப்படுகிறது. இது 11.5 பில்லியன் பவுண்ட் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk