பர்மிங்காம்: மோதிய வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்த வேன்… 2 வயது குழந்தை படுகாயம்!

van, Birmingham
சுவரை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த வேன். (Image: @KINGSNORTONFIRE)

பர்மிங்காமில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீட்டு சுவரை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்ததில் 2 வயது குழந்தை படுகாயம் அடைந்தது.

பர்மிங்காம் நார்த்ஃபீல்டில் காலை சுமார் 7.15 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டின் மீது மோதியது. வீட்டுச் சுவரை இடித்துக் கொண்டு கார் உள்ளே நுழைந்ததில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை காயம் அடைந்தது.

இது குறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், “திடீரென்று பயங்கர மோதல் சத்தம் கேட்டது. என்ன என்று சுதாரிப்பதற்குள் வேன் வீட்டுக்குள் நுழைந்தது. இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது” என்றார். சம்பவ இடத்துக்கு உடனடியாக போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேனை ஓட்டி வந்ததும் ஒரு பெண்மணி என்பது தெரியவந்தது. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சுவற்றை உடைத்துக்கொண்டு வேன் உள்ளே நுழைந்ததில் வீட்டின் காஸ் பைப் இணைப்பு சேதம் அடைந்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அதை சரி செய்தனர். எரிவாயு கசிவு காரணமாக அந்த சாலை சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது.

இது குறித்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சம்பவம் பற்றிய தகவல் அறிந்து எங்கள் குழுவினர் அங்கு சென்றனர். அப்போது வீட்டு சுவரை உடைத்துக்கொண்டு கார் உள்ளே நுழைந்திருந்தது. வேனை ஓட்டி வந்த பெண்மணி ஒருவழியாக வேனின் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்தார். லேசான காயம் என்றாலும் அவர்கள் அனைவரும் பிர்மிங்காம் குவின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஸ் பைப் உடைப்பு இருந்ததால் அது தொடர்பான பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்தே வேனை வேறு எந்த ஒரு சேதாரமும் ஏற்படாமல் வெளியே எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல் தெரிந்தால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk