வெடிகுண்டு மிரட்டல்..? ஆயுதம் ஏந்திய போலீசார்… வாட்டர்லூ மருத்துவமனையில் பதற்றம்!

St Thomas' hospital
வெறிச்சோடி காணப்பட்ட சாலை (Image: Peter Macdiarmid/LNP)

லண்டன், அக்டோபர் 13, 2020: மத்திய லண்டன் வாட்டர்லூ புனித தாமஸ் மருத்துவமனைக்கு இன்று காலை ஆயுதம் ஏந்திய போலீசார் அதிரடியாக நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்டர்லூ புனித தாமஸ் மருத்துவமனைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் ஆயுதம் தாங்கிய போலீசார் அவசரமாக அழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து அந்த பகுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் மற்றும் லம்பேத் அரண்மனை சாலை ஆகியவை பொது மக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் ஒன்று அங்கு வந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் இருந்த ஆண் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அதிரடிப் படையினர் மருத்துவமனைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவப் பணியாளர்களை பாதுகாப்பாக அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு மிரட்டல் விடுத்த நபரைச் சுற்றி வளைத்துள்ளனர்.

அவரிடம் எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லர் என்பவர் கூறுகையில், “நான் இன்று காலை செயிட் தாமஸ் மருத்துவமனை அமைந்துள்ள சாலைக்குள் நுழைய முயன்றேன். ஆனால் போலீசார் என்னைத் தடுத்து நிறுத்தினர்.

மருத்துவமனையில் இருந்து புகைபிடிக்க வெளியே வந்தேன். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணமாக உள்ளே திரும்பிச் செல்ல முடியவில்லை.

உள்ளே இருந்தவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது உள்ளே இருவர் நுழைந்து மருத்துவமனையை வெடிக்க வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் அவர்களைப் பிடிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறியது சற்று வேடிக்கையாக இருந்தது. ஆனால் அதிக அளவில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதும் நான் கவலைப் பட்டேன். 30க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் உள்ளே நுழைந்தனர்.

அவர்களுடன் வெடிகுண்டு அகற்றும் குழுவினர் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. நடந்தவை அனைத்தும் அச்சத்தை ஏற்படுத்தின” என்றார்.

இது குறித்து லம்பேத் போலீசார் கூறுகையில், “ஒரு ஆண் செய்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து காலை 9.18 மணிக்கு செயிட் தாமஸ் மருத்துவமனைக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் ஆயுதம் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இது பயங்கரவாத சம்பவம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter