பிரிஸ்டல்: என்.எச்.எஸ் ஊழியர் மீதான இன ரீதியான தாக்குதல்… இருவர் கைது!

கடந்த வாரம் என்.எச்.எஸ் ஊழியர் மீது நடத்தப்பட்ட இன ரீதியான தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிஸ்டல் 21 வயதான கே என்று அழைக்கப்படும் கே டாக் என்ற இசைக்கலைஞர் வசித்து வருகிறார். இவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் மருத்துவமனையில் என்.எச்.எஸ் ஊழியாராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 22ம் தேதி தன்னுடைய பணியை முடித்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறி பஸ் நிறுத்தத்துக்கு கே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. மூக்கு, கன்னம் எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன அடிப்படையில் கொலை முயற்சியாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

கே மீது மோதிய காரில் இன வெறி தொடர்பான வாசகங்கள் இருந்ததால் இது இன வெறி தொடர்பான தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீடு வீடாக சென்று விசாரணை செய்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் இதன் அடிப்படையில் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களை போலீசார் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மோதல் தொடர்பான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வில் புலனாய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஆன்டி பென்னட் கூறுகையில், “கே டாகுக்கு ஆதரவாக பலரும் உதவ முன் வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு நிதி உதவியாக இருந்தாலும் விபத்து தொடர்பான தகவலை பகிர்வதாக இருந்தாலும் பலரும் முன்வந்துள்ளனர். இதன் மூலம் கே டாகுக்கு துணையாக இருக்கிறோம் என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார்.

கே-டாகுக்கு உதவ பிரிஸ்டலில் உள்ள ஃபிஷ் பாண்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த சிமியோன் மெக்கார்த்தி என்பவர் கோஃபண்ட்மி என்ற பக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் நேரடியாக கே-டாகுக்கு நிதி உதவி செய்ய முடியும். இதுவரை கே-டாகுக்கு 28 ஆயிரம் பவுண்ட் அளவுக்கு மக்கள் நிதி உதவி செய்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk