36,000 ஊழியர்களை தற்காலிகமாக சஸ்பென்ட் செய்கிறதா பிரிட்டிஷ் ஏர்வேஸ்?

உலகில், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிப்பு அடைந்த சில முதல் துறைகளில் விமான சேவைத் துறையும் ஒன்று. கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து வந்துவிடக் கூடாது என பல நாட்டு அரசாங்கங்களும், விமான சேவைகளை நிறுத்தி வைத்தார்கள்.

இதனால் சர்வதேச அளவில் பல பில்லியன் டாலர் வருவாயை இழந்து இருக்கிறது விமான சேவை நிறுவனங்கள்.

இப்படி வர வேண்டிய வருவாய் எல்லாம் அடி வாங்கிக் கொண்டு இருந்தால் எப்படி விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து கம்பெனியை நடத்த முடியும்..? எனவே இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாகக் குறைத்து இருக்கிறார்கள்.

ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த சம்பள குறைப்பில் எல்லாம் இறங்கவில்லை நேரடியாக சுமார் 36,000 ஊழியர்களை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை பிபிசி நிறுவனம், ஏப்ரல் 01, 2020 அன்று உறுதி செய்து இருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கேபின் குழுவினர்கள், தரை தள உதவியாளர்கள் (Ground Staff), பொறியாளர்கள், தலைமை அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் போன்றவர்களில் சுமாராக 80 சதவிகித ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய இருக்கிறார்களாம். சுருக்கமாக தேவை இல்லாமல் யாரையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

தெற்கு இங்கிலாந்தில் இருக்கும், இங்கிலாந்தின் இரண்டாவது முக்கிய விமான நிலையமான கத்விக் விமான நிலையத்தில் (Gatwick Airport) இருந்து இயங்கும் விமானங்களை, கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த மார்ச் 31, 2020 அன்று சொன்னது குறிப்பிடத்தக்கது.