கடைகளில் ஃபேஸ் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்வது சாத்தியமில்லை! – போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு

கடைகளுக்குள் மக்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது கடுமையாக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ள நிலையில் முகக் கவசம் அணிவதை கண்காணிப்பது சாத்தியமில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 24 முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று ஆகியுள்ளது. கடைகளில் மாஸ்க் அணியாதவர்களைக் கண்டால் பார்த்த இடத்திலேயே அபாராதம் விதிக்கவும், 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் உதவும் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் கூறுகின்றன. பல நாடுகளில் வெளியே செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என்று உள்ளது. உலக அளவில் கொரோனா மரணத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள யு.கே-வில் முகக் கவசம் பற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்திய நிலையில், விரைவில் அது பற்றிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு கட்டாயமாக மாஸ்க் அணி வேண்டும் என்ற நிலை கொண்டுவரப்படும் என்றார். இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோபாலிடன் போலீஸ் ஃபெடரேஷன் தலைவர் கென் மார்ஷ் கூறுகையில், “தொற்றுநோய் தவிர்ப்பு எச்சரிக்கைகள் அனைத்தையும் போலீசாரே மேற்கொள்ள முடியாது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் கடை உரிமையாளர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். ஒருவர் முகக் கவசம் அணியவில்லை என்பதற்காக போலீசை அழைப்பது எல்லாம் சரியாக இருக்காது. கடை உரிமையாளர்கள் முகக் கவசம் அணியாத நபரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் அவர் தன் வழியைப் பார்த்து நடக்கப் போகிறார். நாங்கள் லண்டன் நகரைச் சுற்றி சுற்றி வந்து முகக் கவசம் அணியாதவர்களை கண்காணிப்பது எல்லாம் முற்றிலும் அபத்தமானது” என்றார்.

சுற்றுச்சூழல் செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறுகையில், “முகக் கவசம் விவகாரத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம். இருப்பினும் அபராதம் விதிக்க வேண்டியது போலீஸ்தான். மக்கள் இந்த விதிமுறை, கட்டுப்பாடுகளை உணர்ந்து தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும். மேலும் இது ஒன்றும் புதிதாக விஷயம் இல்லை. இந்த கொரோனா காலத்தில் நாம் சில இயல்புக்கு மீறிய சில விஷயங்களை செய்தாக வேண்டியுள்ளது” என்றார்.