யார்க் ஷேயரில் ஒதுங்கிய சுறா மீன்! – மூடப்பட்ட கடற்கரை

Yorkshire, coast

யார்க் ஷேயர் கடற்கரைப் பகுதியில் சுறா மீன் ஒன்று தென்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரை மூடப்பட்டது. மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

வடக்கு யார்க்‌ஷேயர் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை சுறா ஒன்று தென்பட்டது. கடற்கரைக்கு ஒரு சில மீட்டர் தொலைவில் அது நீந்திக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 4.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த சுறாவைப் பார்த்து மக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து போலீசார், கடலோர காவல் படையினர் என அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டது.

அந்த சுறா மீன் நீந்த முடியாமல் கரை ஒதுங்க முயல்வது போல இருந்தது. இதனால், சில தன்னார்வலர்கள், கடலோர காவல் படையினர் அந்த சுறாவை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று விட முயற்சி செய்தனர். ஆனால், அது மீண்டும் மீண்டும் கடற்கரைக்கு வந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மெரைன் சேரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு கூறுகையில், அந்த சுறாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் அது கடலுக்குள் செல்ல மறுக்கிறது. உடல்நலம் பாதித்து, கரை ஒதுங்க முயலும் சுறாவைக் கருணைக் கொலை செய்துவிடுவது நல்லது” என்றது.

அந்த அமைப்பைச் சேர்ந்த ராபின் பெட்ச் கூறுகையில், “பாஸ்கிங் வகை சுறா இது. இந்த சுறாவை கடலோர பாதுகாப்பு படை, பொது மக்கள், தன்னார்வலர்கள் ஆழ்கடலுக்கு கொண்டு சென்று விட விரும்பினர். ஆனால் அது செல்ல மறுக்கிறது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வந்து ஆய்வு செய்தனர்” என்றார்.

பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “சுறாவின் வலது துடுப்புப் பகுதியில் துடுப்பு போட முடியாமல் சுறா தவிக்கிறது. இதனால், அது ஒரே இடத்தில் சுற்றுகிறது. அதை ஆழ்கடலில் விட முயன்றும் அது மீண்டும் கரையை நோக்கி வருகிறது. நேரமாகிவிட்டது என்பதால் அதற்கு என்ன பிரச்னை என்று மருத்துவரால் கண்டறிய முடியவில்லை.

பாஸ்கிங் சுறாக்கள் இந்தப் பிராந்தியத்தில் உயிர்வாழும் சுறாக்களில் இரண்டாவது மிகப்பெரிய வகையாகும். பொதுவாக இந்த வகை சுறாக்கள் 10 முதல் 11 மீட்டர் வரை வளரும். இது 4.4 மீட்டர் அளவில் உள்ளது. இந்த வகை மீன்கள் ஆழ்கடலில் மட்டுமே தென்படும். உடல் நலக் குறைவு காரணமாக கரை ஒதுங்கியிருக்கிறது. ஆழமற்ற பகுதியில் நீத்தியதால் கூட அதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்பு வந்திருக்கலாம்” என்றார்.

சுறா கடற்கரையில் உள்ளதால் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk