கார் மோதி இறந்த சிறுவனுக்கு நூற்றுக் கணக்கானோர் அஞ்சலி! – நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி

எடின்பர்கில் நடைபாதையில் அம்மாவுடன் சென்ற மூன்று வயது சிறுவன் சாண்டர் இர்வின் மரணமடைந்ததான். அவனது உடலை சுமந்து வந்த வாகனத்தின் மீது நூற்றுக் கணக்கானோர் ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

கடந்த ஜூன் 30ம் தேதி எடின்பர்கில் மார்னிங் சைட் சாலையில் அம்மா விக்டோரியாவுடன் சிறுவன் இர்வின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பக்கம் வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தான். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவன் அம்மா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சிறுவன் சாண்டார் இர்வினின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. சாலையில் வரிசையாக நின்ற மக்கள், உடல் சுமந்து சென்ற காரின் மீது ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். கிட்டத்தட்ட 400 ரோஜா மலர்கள் இதற்காக கொடுக்கப்பட்டதாக உள்ளூர் மலர் விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மீது உள்ள அன்பின் வெளிப்பாடாக பலரும் சிறுவனுக்கு பிடித்த பொம்மைகள், பூங்கொத்துக்களை சிறுவன் இறந்த இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த இடம் முழுக்க பூக்களால் நிறைந்து காணப்பட்டது.

சாண்டர் மிகவும் மகிழ்ச்சியான துடிப்பான, புத்திசாலியான குழந்தை. அனைவராலும் விரும்பப்படும் குழந்தையாக இருந்துள்ளான். அனைத்துக்கும் மேலாக அவன் மீது அவன் அப்பா பால், அம்மா விக்டோரியா அளவுகடந்த அன்பை வைத்திருந்தனர். எப்போதும் விடாமல் பேசிக்கொண்டே இருக்கும், புத்தகங்களை விரும்பும், விளையாட்டை விரும்பும் குழந்தையாக சாண்டர் இருந்துள்ளான். சிறுவனின் இறப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

சிறுவன் உயிரிழக்கக் காரணமான காரை 91 வயதான மூதாட்டி ஓட்டி வந்துள்ளார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அறியாமல் நடந்த விபத்து என்பதால் மூதாட்டி கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் பெற்றோருக்கு உதவும் வகையில் நிதி திரட்டலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை (வியாழக் கிழமை) 25 ஆயிரம் பவுண்ட் நன்கொடை கிடைத்துள்ளது.