நிரந்தரமாக 8 கடைகளை மூடும் ஜான் லூயிஸ்! – கொரோனா காரணம் இல்லையாம்

ஜான் லூயிஸ் தன்னுடைய எட்டு கடைகளை நிரந்தரமாக மூடப்போவதாக அறிவித்துள்ளதால் 1300 பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த எட்டு கடைகள் அடைப்புக்கும் கொரோனா பாதிப்புக்கும் தொடர்பில்லை, ஆன்லைன் வர்த்தகம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மிகப் பெரிய டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் தொடரான ஜான் லூயிஸ் தன்னுடைய எட்டு கடைகளை நிரந்தரமாக மூடப்போவதாக அறிவித்துள்ளது. பர்மிங்காம் மற்றும் வாட்ஃபோர்டில் உள்ள மூடப்பட்ட தன்னுடைய ஸ்டோர்களை அது திறக்கப் போவது இல்லை என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா வருவதற்கு முன்பு இருந்த இந்த எட்டு கடைகளும் பல நிதி தொடர்பான சிக்கலை சந்தித்து வந்தது. வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடிய நிலையில் இந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

கொரோனாவுக்குப் பிறகு வர்த்தகம் மிகப்பெரிய அடியை வாங்கியுள்ளது. எனவே ஆன்லைன் ஷாப்பிங்கை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் ஜான் லூவிசின் மொத்த வர்த்தகத்தில் 60 முதல் 70 சதவிகிதம் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக வந்ததாக இருக்கும் என்று அது அறிவித்துள்ளது.

இது குறித்து ஜான் லூயிஸ் பார்ட்னர்ஷிப் சேர்உமன் ஷேரன் வொயிட் கூறுகையில், “கடையை மூடுவதாக அறிவிப்பது எப்போதுமே தர்மசங்கடமானது. இன்று அது போன்ற ஒரு அறிவிப்பு வெளியாவது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இந்த மூடல் அத்தியாவசியமானதாக உள்ளது. இது எங்களை நிலைநிறுத்த எங்களுடன் இணைந்து தொழில் செய்பவர்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நாங்கள் வேறு ஒரு தளத்தில் தயாராக உள்ளோம்” என்றார்.

குரோய்டன், நியூபரி, ஸ்விண்டன் மற்றும் டாம்வொர்த்தில் உள்ள ஹோம் ஸ்டோர்கள் மூடப்படும் என்று தெரிகிறது. ஹீத்ரூ விமான நிலையம் மற்றும் லண்டன் செயின்ட் பாங்க்ராஸ் ஆகிய இடங்களில் உள்ள ஸ்டோர்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1300க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.