லெஸ்டரில் ஊரடங்கை தளர்த்த வேண்டும்! – மேயர் வலியுறுத்தல்

Lockdown, Leicester
Picture: PA

லெஸ்டரில் ஊரடங்கை 90 சதவிகிதம் அளவுக்கு தளர்த்த வேண்டும் என்று லெஸ்டர் மேயர் சர் பீட்டர் சோல்ஸ்பி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் லெஸ்டரில் இன்னும் ஊரடங்கு உள்ளது. அங்கு பெருந்தொற்று அதிகமாக உள்ளதாலும் பரவுதல் வேகம் அதிகமாக உள்ளதாலும் கடந்த ஜூன் 29ம் தேதி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. இந்த நிலையில் லெஸ்டரிலும் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர், “நாட்டின் மற்ற பகுதிகளை விட லெஸ்டாில் கொரோனாத் தொற்று அதிகமாகவே உள்ளது. தற்போதைய நிலையை மாற்றுவது தொடர்பாக லெஸ்டர் தலைவர்களுடன் எந்த சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை” என்று கூறியிருந்தார்.

சுகாதாரத் துறையின் கருத்துக்கு லெஸ்டர் மேயர் சர் பீட்டர் சோல்ஸ்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தற்போது லெஸ்டரில் நோய்த் தொற்று குறைவாகவே உள்ளது. புதிய புள்ளிவிவரங்கள் 10 சதவிகித லெஸ்டரில் மட்டுமே மிகத் தீவிர தொற்று விகிதம் உள்ளதாக கூறுகின்றன இந்த நிலையில் ஊரடங்கு தளர்வதால் மக்களிடம் கோபம், குழப்பமான சூழல் அதிகரிக்கும். எனவே, 90 சதவிகித ஊரடங்கை தளர்த்த வேண்டும்.

லெஸ்டரில் ஊரடங்கு என்பது இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை முடிவு என்பதைத் தாண்டி அரசியல் ரீதியான முடிவாகவே இருந்தது. தற்போது எங்களை இதில் இருந்து விடுவிக்க வேண்டும். அது அரசியல் ரீதியான முடிவாக இருந்தாலும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நகரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த முடிவு எடுப்பதற்கு முன்னதாக எங்களிடம் கலந்து பேசவே இல்லை” என்றார்.

அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்று கேட்டபோது, “லெஸ்டரில் எங்களின் செயல்பாடு காரணமாக வைரஸ் தொற்று குறைந்து வருவதை சுகாதாரத் துறை செயலாளர் அங்கீகரிப்பார் என்று நம்புகிறோம்” என்றார்.

லெஸ்டரில் கடந்த ஜூன் 28ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப் பட்ட போது ஒரு லட்சம் பேருக்கு 143.6 பேருக்கு தொற்று என்ற அளவில் பாதிப்பு இருந்தது. ஜூலை ஐந்தாம் தேதி அது 127.2 ஆக குறைந்தது. அடுத்த ஏழு நாளில் அதாவது ஜூலை 12ம் தேதி புள்ளிவிவரப் படி ஒரு லட்சம் பேருக்கு 104.4 ஆக குறைந்துள்ளது.