லிவர்பூல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவு செய்யப்பட்ட கட்டுப்பாடு… போர்க்கொடி தூக்கும் நகர சபைகள்!

Matt Hancock
மெட் ஹென்காக் கோப்பு புகைப்படம். (Image: PA)

லண்டன், அக்டோபர் 1, 2020: லிவர்பூல் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்று திடீரென்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் இன்று காலை 10.30 மணி அளவில் மக்களவையில் திட்டமிடப்படாத அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கொரோனா பற்றிய தற்போதைய சூழல், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதில், “வெவ்வேறு வீடுகளில் உள்ளவர்களுக்கு இடையே சமூக கலப்புக்கு எதிராக பரிந்துரையை நாங்கள் வழங்கியுள்ளோம். சமூக கலப்பைத் தடுக்க வட கிழக்கில் ஒழுங்கு முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பூங்கா, உணவகம் போன்ற இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் தேர்ந்த அல்லது அமெச்சூர் விளையாட்டு ஆர்வலராக இருந்தாலும் சரி அவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

இந்த வாரத் தொடக்கத்தில் வடகிழக்கு மற்றும் டீசைடு பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தோம். இருப்பினும் அந்த பகுதிகளில் கொரோனாத் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

லிவர்பூலில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 268 என்ற அளவில் தொற்று உள்ளது. எனவே, நகர சபை தலைவர்கள், மேயர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது.

வட கிழக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நடவடிக்கைகள் லிவர்பூல் நகர மண்டலம், வாரிங்டன், ஹார்ட்ஸ்ஃபுல் மற்றும் மிடில்ஸ்பரோ வரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்த பகுதி மக்களுக்கு ஆதரவளிக்க 7 மில்லியன் பவுண்ட்கள் வழங்கப்படும்” என்றார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு லிவர்பூல், மிடில்ஸ்பரோ உள்ளிட்ட நகர சபைகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் முடிவை ஏற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter