ஸ்காட்லாந்து: லாட்டரியில் 5.7 கோடி பவுண்ட் வென்றவருக்கு நான்கு வார அவகாசம்!

யூரோ மில்லியன் கோப்புப் படம். (Image: devonlive.com 2013 AFP)

லாட்டரியில் 57,879,670 பவுண்ட் வெற்றி பெற்ற நபருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூரோ மில்லியன் லாட்டரி குலுக்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் வாங்கிய டிக்கெட்டுக்கு கடந்த மார்ச் மாதம் 57,879,670 பவுண்ட் ஜாக்பாட் விழுந்தது. ஆனால், இதுவரை யாரும் தாம்தான் அந்த டிக்கெட்டை வாங்கினேன் என்று உரிமை கோரி அணுகவில்லை. லாட்டரி நிறுவனம் தரப்பில் யார் வாங்கினார்கள் என்று தேடி வந்தனர். ஆனால் அவர்களாலும் அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் லாட்டரி ஜாக்பாட் வெற்றியாளர் வருகிற செப்டம்பர் 13ம் தேதிக்குள் வந்து உரிமை கோர வேண்டும், இல்லை என்றால் வெற்றி பெற்ற பணம் முழுவதும் அவர் இழக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால், விதிமுறைகள் படி அந்த பணம் சமூக நலனுக்காக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷேனல் லாட்டரியைச் சேர்ந்த ஆன்டி கார்டர் கூறுகையில், “இவ்வளவு பெரிய தொகையை வென்ற மர்ம நபரை நாங்கள் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த டிக்கெட் ஸ்காட்லாந்தின் அயர்ஷயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த யாராவது இந்த டிக்கெட் வாங்கியிருந்தால் தயவு செய்து வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

செப்டம்பர் 13ம் தேதிக்குள் வந்து வாங்கவில்லை என்றால், அந்த பணம் சமூக நலப் பணிகளுக்கு செலவிடப்படும். கடந்த 2012ம் ஆண்டு யூரோமில்லியன் ஜாக்பாட்டில் 65 மில்லியன் பவுண்டும், 2018ம் ஆண்டு 125.1 மில்லியன் பவுண்டும் யாரும் வாங்காத நிலையில் சமூக பணிக்காக வழங்கப்பட்டது.

டிக்கெட் வெற்றியாளர்கள் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 180 நாட்களுக்குள் வந்து உரிமை கோரினால் மட்டுமே அது அவர்களுக்கு வழங்கப்படும்.

அச்சிடப்பட்ட லாட்டரியாக வாங்கும்போது அதை பராமரிப்பது மிகவும் கடினம். கிழிந்துவிட, தொலைந்துவிட வாய்ப்பு அதிகம். எனவே தான் ஆன்லைனில் வாங்கப் பரிந்துரைக்கிறோம். அப்படி செய்தால் டிக்கெட் தொலையாது, வெற்றி பெற்றால் பணமும் கிடைக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk