ஓல்ட்ஹாமில் அறைகளுக்கு கஞ்சா வளர்ப்பு! – மதிப்பு 1.2 மில்லியன் பவுண்ட்; ஒருவர் கைது!

Oldham, cannabis

ஓல்ட்ஹாமில் ஒரு பண்ணையில் ரகசியமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1.2 மில்லியன் பவுண்ட் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓல்ட்ஹாம் ஷா சாலையில் இயங்கும் பண்ணை ஒன்றின் கட்டிடத்தில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஜூலை 24ம் தேதி இரவு 10.15 மணி அளவில் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பல அறைகளில் 3000க்கும் மேற்பட்ட தொடிகளில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக 36 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு இருந்த கஞ்சா செடிகளின் மதிப்பு 1.2 மில்லியன் பவுண்ட் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அறைக்குள்ளும் மின் விசிறி, சரியான வெப்பநிலையை பராமரிக்க பிரத்தியேக விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது.

இது குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் தரப்பில் கூறுகையில், “இது போன்ற போதைப் பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் விற்பனை செய்யப்படுகிறது. தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற போதை செடிகள் வளர்ப்பு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். நேற்றிரவு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டது சமூக விரோத கும்பலுக்கு மிகப்பெரிய நிதி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்” என்றனர்.

ஓல்ட்ஹாம் மாவட்டம் கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன்டனி ஆல்ட் கூறுகையில், “போதைப் பொருள் விநியோகத்தைத் தடுக்க போலீசாரும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வு மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. காவல் துறையுடன் ஓல்ட்ஹாம் சமூகமும் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்துக்காக பலரும் சிறைக்கு செல்வதையும் குறைக்க முடியும்.

நீங்கள் வசிக்கும் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வது பற்றி அறிந்தால், குழந்தைகள் அல்லது எளிதில் போதை பழக்கத்துக்கு ஆளாகும் வயதினர் போதை கும்பலிடம் சிக்கி அவதியுறுகிறார்கள் என்று தெரிந்தால் தாமதிக்காமல் உடனடியாக போலீசாரை தொடர்புகொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk