இங்கிலாந்து வழங்கிய சுவாமி சிலைகள்… தமிழக போலீசிடம் ஒப்படைப்பு!

swami statues, recovered, சிலை, திருட்டு

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டு இங்கிலாந்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. அவை பத்திரமாக தமிழக போலீசிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் பொறையாறு அருகே அனந்தமங்கலம் என்ற ஊரில் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த 1978ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த செல்வராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிலையைத் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், சிலை யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டு அதிகரிக்கவே, வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள சிலை விற்பனை டீலர் ஒருவர் ராமர், சீதை, லட்சுமணர்  சிலைகளை விற்பனை செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அந்த சிலைகள் 42 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோவில் சிலைகள் போல இருக்கவே, அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய தூதரகம் மூலமாக இங்கிலாந்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் அந்த சிலைகள் தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

இவற்றை ஏற்றுக்கொண்ட சிலை விற்பனை நிறுவனம் அவற்றை தமிழகத்துக்கு திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது.

இதன் படி சுவாமி சிலைகளை இங்கிலாந்து அரசு இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அந்த சுவாமி சிலைகளை இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிடம் ஒப்படைத்தார்.

சென்னை வந்தது…

அவை இன்று (19ம் தேதி) விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பிறகு, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிகிறது.

தற்போது மூன்று சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. 10 கை கொண்ட தஜபுஜ ஆஞ்சநேயர் சிலை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

அது சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter