பர்மிங்காம்: 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை

பர்மிங்காமில் இரண்டாவது தளத்தில் இருந்து ஜன்னல் வழியே ஒரு வயதுக் குழந்தை தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்

பர்மிங்காமில் உள்ள எர்டிங்டனில் ஒய்.எம்.சி.ஏ குடியிருப்பு உள்ளது. இங்கு இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே குழந்தை கீழே விழுந்துள்ளது பலத்த காயம் அடைந்த அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மாடியில் இருந்து விழுந்ததை நேரில் யாரும் காணவில்லை. தாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர். எனவே, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் இது குறித்து போலீசில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நான் சம்பவத்தைப் பார்க்கவில்லை, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்தேன். அதன் பிறகு அங்கு நிறைய போலீசார், ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அங்கிருந்தவர்கள் தான் குழந்தை தவறி விழுந்ததாகக் கூறினார்கள். குழந்தை நலமுடன் திரும்பப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

ஒய்.எம்.சி.ஏ ஹார்ட் ஆஃப் இங்கிலாந்து ஊடக பேச்சாளர் இது குறித்து கூறுகையில், “நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. பர்மிங்காமில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஒய்ன்யார்டு குடியிருப்பில் இது நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்ததும் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை ஒய்.எம்.சி.ஏ ஊழியர்கள் வழங்கினர். எங்கள் மனம் எல்லாம் குழந்தையைச் சுற்றியே உள்ளது. அந்த குழந்தைக்கு எங்களுடைய பிரார்த்தனைகள்.

இது தொடர்பாக மிட்லாண்ட் போலீசாருக்கு நாங்கள் ஒத்துழைப்ப வழங்கி வருகிறோம். இது எப்படி நடந்தது என்று நாங்களும் தனியாக விசாரணை நடத்துகிறோம். ஒய்ன்யார்டு குடியிருப்பு கடந்த 2016ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது. அதில் பாதுகாப்பு அம்சங்கள் மிகத் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு உதவத் தயாராக உள்ளோம்” என்றார்.

வெஸ்ட் மிட்லாண்ட் போலீஸ் அதிகாரி கூறுகையில், “நேற்று இரவு 7.30 மணி அளவில் குழந்தை 2வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரிவிக்கலாம். எங்கள் இணையதளத்துக்கு வந்தும் கூறலாம்” என்றார்.