ஹம்பர்சைட் ஹல்: சாலையில் தனியாக நடந்து சென்ற 2 வயது சிறுவனால் பரபரப்பு!

சிறுவனை தூக்கிவைத்து சமாதானம் செய்யும் போலீஸ் அதிகாரி. (Image: thesun.co.uk)

ஹம்பர்சைட், செப்டம்பர் 27, 2020: ஹம்பர்சைட் ஹல்லில் இரண்டு வயது சிறுவன் பெற்றோர் துணையின்றி தனியாக நடந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளில் இருந்து தவறுதலாக குழந்தைகள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. ஹம்பர்சைட் ஹல்லில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகலில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சாலையில் தனிமையில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்போது, தன்னுடைய மகனுடன் வந்து கொண்டிருந்த ஒருவர் சிறுவன் தனியாக நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவனுடன் வேறு யாராவது வருகிறார்களா, குழந்தையைத் தேடி யாராவது பின்னால் வருகிறார்களா என்று பார்த்துள்ளார். யாரும் வரவில்லை. (வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்)

இதனால், சந்தேகம் அடைந்த அந்த நபர் சிறுவனைத் தூக்கி வைத்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து அவனிடம் பெற்றோர் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கிறதா என்று விசாரித்த போது அவன் அழுத காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவன் சிவப்பு நிற கோட்டும், பச்சை நிற அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தான்.

சிறுவன் அழ ஆரம்பிக்கவே அவனை போலீஸ் அதிகாரி தூக்கி வைத்து சமாதானம் செய்தார்.

சிறுவனின் பெற்றோர் யார், அவர்கள் எப்படிப் பொறுப்பின்றி குழந்தையை வெளியே விட்டார்கள், குழந்தை காணவில்லை என்று தெரிந்த பிறகு அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்களா என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் சிறுவன் அவனுடைய குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டதாக தி சன் பத்திரிகை நிருபரிடம் ஹம்பர்சைட் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அப்படி அவர்கள் குழந்தையின் பெற்றோரைக் கண்டு பிடித்து ஒப்படைத்தார்கள் என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் சாலையில் சிறுவன் தனியாக நடந்து வருவதை கண்டறிந்து, அவனை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்த அந்த நல்ல மனம் கொண்ட நபரைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

கடந்த மாதம் தென் கிழக்கு லண்டனில் இதே போல் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டார். மிகவும் சிறிய குழந்தை என்பதால் தன்னுடைய பெயர், முகவரி என எதையும் அந்த குழந்தையால் கூற முடியவில்லை.

இதனால், குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter