இங்கிலாந்து: கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்தது!

ங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று குறைந்து இருந்தாலும், தினமும் 400, 500 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போதும் உலக அளவில் கொரோனாத் தொற்று உயிரிழப்பில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று 85 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தில் இதுவரை 45,053 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 2.9 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் முற்றிலும் கொரோனா அச்சம் அகலவில்லை. நேற்று புதிதாக 538 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் நிம்மதி தரும் விஷயம் ஸ்காட்லாந்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை என்பதுதான்.

இங்கிலாந்தில் தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 75 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் 587 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. நாடு முழுக்க 92 ஆயிரம் பேர் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து நிலையில் உள்ளதாகவும் அவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு போன்றவை அறிவிக்கப்பட்டால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

லங்காஷையர் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சக்தி கருணாநிதி அப்பகுதி மக்களுக்கு எச்சரக்கைவிடுத்துள்ளார். மக்கள் தங்கள் கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது கொரோனாத் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை மறுக்க முடியாது. லாக்டவுன் பாதிப்பிலிருந்து வெளியே வர நாம் உதவ வேண்டும்” என்றார்.

அரசு கடைகளில் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவது, உயிரிழப்பு அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.