இரண்டு வாரங்களில் பப்கள் திறக்கப்படுமா என்பதற்கு உத்திரவாதம் இல்லை! – அமைச்சர் கைவிரிப்பு

பப் மூடப்பட்ட பிறகும் தெருக்களில் திரண்டிருந்த மக்கள்! (Image: PA:Press Association)

கிளாஸ்கோ, அக்டோபர் 11, 2020: இரண்டு வாரங்களில் கொரோனா நிலை சீராகி பப், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஸ்காட்லாந்தின் ஆஸ்பெட்டாலிட்டி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் கொரோனாத் தொற்று காரணமாக பார், பப், ரெஸ்டாரண்ட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அங்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு பப், பார், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மீதமான உணவுப் பொருட்களை எல்லாம் சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பார், பப் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று ஸ்காட்லாந்தின் ஆஸ்பெட்டாலிட்டி அமைச்சர் ஃபெர்காஸ் எவிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ஸ்காட்லாந்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமானவை. இது அக்டோபர் 25ம் தேதி வரை தொடரும்.

ஊரடங்கு காரணமாக விருந்தோம்பல் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் தாக்கத்தை நன்கு உணர்ந்துள்ளோம்.

சரியான நேரத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவராமல் விட்டிருந்தால், இன்னும் மோசமான முழுமையான கட்டுப்பாடு என்ற நிலையை நோக்கிச் சென்றிருப்போம்.

ஸ்காட்லாந்து முதல்வர் மேலும் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்டுப்பாடுகளை தொடர்வது அல்லது 25ம் தேதியோடு முடிப்பது என்பது தொற்று நோய் பரவலின் எண்ணிக்கையை பொருத்தாது. 25ம் தேதி வரை மட்டுமே கட்டுப்பாடுகள் இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது” என்றார்.

கிரேட்டர் கிளாஸ்கோ, கிளைட், லோதியன், லானர்ஷயர், ஃபோர்த் வேலி மற்றும் அயல்ஷயர், அரான் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் முறை தொடர்கிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter