இங்கிலாந்தில் ஜூலை 24 முதல் முகக் கவசம் கட்டாயம்! – மீறினால் 100 பவுண்ட் அபராதம்

இங்கிலாந்தில் ஜூலை 24ம் தேதி முதல் கடைகளுக்குள் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நடுப்பகுதி வரை வெளியிடங்களுக்கு வரும்போது, மற்றவர்களை சந்திக்கும்போது பொது மக்கள் முகக் கவசம் அணியும்படி வற்புறுத்தப்பட்டனர். அதன்பிறகு அது பற்றி பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. 11 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், குறிப்பிட்ட உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது கடைகளுக்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹென்காக் இது குறித்து கூறுகையில், “கடைகளுக்குள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய, கடைகளுக்குள் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக விற்பனை உதவியாளர்கள், காசாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அதிக அளவில் கொரேனானா நோய்த் தொற்றுக்கு ஆளாகினர். விற்பனை பணியாளர்களின் இறப்ப விகிதம் பொது மக்களை விட அதிகமாக உள்ளது. முகத்தை மறைப்பது மக்கள் கடைகளுக்கு வருவதை அதிகரிக்கச் செய்யும். இங்கிலாந்தில் கொரோனாவுக்கு புதிதாக பலியான 138 பேரின் மரணம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அரசின் முடிவை லேபர் கட்சியினர் விமர்சித்துள்ளனர். அரசு எதற்காக இன்னும் ஒரு 11 நாள் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் தங்களைத் தயார் செய்யவே இந்த 11 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.