லண்டன்: மூதாட்டியின் கையைக் கடித்து திருமண மோதிரத்தைத் திருடிய பெண்!

Monique Roach
ஏழு ஆண்டு சிறை தண்டனை பெற்ற பெண் ரோச் (Image: Met Police)

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வூதியம் பெறும் மூதாட்டி ஒருவரின் கையில் உள்ள திருமண மோதிரத்தைத் திருடுவதற்காக அவரது கையை கடித்த பெண்ணுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.

ஹாக்னியின் டால்ஸ்டன் லேனில் உள்ள குடியிருப்பில் 75 வயதான மூதாட்டி வசித்து வந்தார். கடந்த மார்ச் 28ம் தேதி அவரது வீட்டுக் கதவைப் பெண்மணி ஒருவர் தட்டியுள்ளார். என்ன ஏது என்று அந்த மூதாட்டி கதவைத் திறந்து பார்த்துள்ளார். அங்கே நின்றிருந்த பெண் கண்ணீருடன், 10 பவுண்ட் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அந்த மூதாட்டி கதவை மூட முயன்ற போது, வெளியே நின்ற பெண் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அந்த மூதாட்டி அணிந்திருந்த திருமண மோதிரத்தை கழற்ற முயன்றுள்ளார். மோதிரம் கழற்ற முடியாத நிலையில் கைவிரலைக் கடித்து ஒரு வழியாக மோதிரத்தை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

அந்த மூதாட்டி உடனடியாக தனது மகளைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் கதவில் குற்றம் செய்த பெண்ணின் கைரேகை இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

அதன் அடிப்படையில் யார் அவர் என்று தேடுதல் வேட்டை நடந்தது. மேலும், அருகில் உள்ள சிசிடிவி காமர காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட பெண்மணியை கண்டறிந்தனர்.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி ரெண்ட்ல்ஷாம் சாலையில் இந்த குற்றத்தை செய்ததாக மோனிக் ரோச் (24) என்ற பெண்ணை கண்டறிந்தனர். ரோச் தான் குற்றம் செய்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்களைத் திரட்டிய பிறகு, அவர் மீது உட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ரோச் இந்த மூதாட்டியிடம் மட்டுமின்றி, பலரிடமும் இப்படி பணம் கேட்டு அடாவடித்தனம் செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ரோச் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ரோச்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk